இதுவரை இல்லாத அளவு விற்பனையில் மிக பெரிய சரிவை சந்தித்துள்ள கியா செல்டோஸ்...
கியா செல்டோஸ் மாடலின் வரவேற்பு இந்தியாவில் சிறுக சிறுக குறைந்து வருவதை காட்டும் விதமாக அந்த காரின் டிசம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா செல்டோஸ் மாடல் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகமானதில் இருந்து மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை அனைத்து மாதங்களிலும் பெற்று வந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் மிக பெரிய வீழ்ச்சியடைந்து வெறும் 4,645 கார்கள் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனையாகியுள்ளது.

அறிமுகமான ஆகஸ்ட் மாதத்தில் 6,200 யூனிட்கள் விற்பனையாகி இருந்த செல்டோஸ் எஸ்யூவி அதிகப்பட்சமாக கடந்த நவம்பர் மாதத்தில் சுமார் 14,000 கார்கள் வரை விற்பனையானது. ஆனால் கடந்த மாதத்தில் 4,645 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருப்பதன் மூலம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 66 சதவீத வீழ்ச்சியை கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அடைந்துள்ளது.

இதேபோன்று வேறு சில முன்னணி மாடல்களும் தான் கடந்த மாதத்தில் விற்பனையில் சரிவை கண்டுள்ளன. ஆனால் செல்டோஸ் மாடல் வீழ்ச்சியடைந்திருப்பது, இந்த ஒரே ஒரு காரை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகின்ற கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

செல்டோஸ் மாடலின் விற்பனை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என நம்பி கொண்டிருக்கும் கியா நிறுவனம் செல்டோஸ் தான் 2020ஆம் வருடத்தில் சிறப்பாக விற்பனையான எஸ்யூவி என்ற பெயரையும் எடுக்கும் என நம்பிக்கை வைத்துள்ளது.

செல்டோஸ் மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாத எஸ்யூவி கார்களின் விற்பனையில் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் டிசம்பர் மாத விற்பனை லிஸ்ட்டில் இந்த கார் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது சிரமம் தான்.

இந்திய சந்தையில் மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட செல்டோஸ் மாடல்களும் கூட 2019 நவம்பர் மாதத்தில் சிறப்பாகவே விற்பனையாகி இருந்தது. கடந்த நவம்பரில் 3,800 செல்டோஸ் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தன.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட செல்டோஸ் கார்களை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் டாப் 5 கார்களில் செல்டோஸ் மாடலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களின் ஏற்றுமதிக்கு சென்னை துறைமுகத்துடனும் லாஜிஸ்ட்டிக்ஸ் செயல்பாடுகளுக்காக க்ளோவிஸ் இந்தியா அனந்தபுர் தனியார் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. குறிப்பாக கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சென்னை துறைமுகத்தை தான் முற்றிலுமாக கியா நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

அதிகளவில் அட்வான்ஸான தொழிற்நுட்பங்களை பெற்ற எஸ்யூவியாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் செல்டோஸ் மாடலில் 10.25 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், எட்டு இன்ச்சில் ஹெட்-அப் திரை, வயர்லெஸ் சார்ஜிங், இடைவெளிகளுடன் காற்றோட்டமாக இருக்கை அமைப்பு, எட்டு விதங்களில் மின்சாரம் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கியா நிறுவனம் வழங்கியுள்ளது.

இவை மட்டுமின்றி பாதுகாப்பு அம்சங்களும் அதிகமாகவே செல்டோஸ் எஸ்யூவி காரில் கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டு மற்றும் கர்டைன் காற்றுப்பைகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், காரின் நிலைத்தன்மையை சீராக வைத்திருக்கும் அமைப்பு, ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியையும் காண மானிட்டர் மற்றும் டயரின் அழுத்தத்தை காட்டும் மானிட்டர் போன்றவை பாதுகாப்பு தொழிற்நுட்பங்களாக இந்த காரில் உள்ளன.

இவ்வாறு அதிகளவில் பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளதால் ஏஎன்சிஏபி அமைப்பு இந்த காருக்கு ஐந்து நட்சத்திர மதிப்பெண்ணை சமீபத்தில் வழங்கியிருந்தது. செல்டோஸ் காரின் இந்த க்ராஷ் சோதனை குறித்து விரிவாக தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

செல்டோஸ் மாடலில் மூன்று பெட்ரோல் மற்றும் மூன்று டீசல் என்ஜின் தேர்வுகளை கியா நிறுவனம் வழங்கியுள்ளது. அனைத்து என்ஜின்களும் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானவை. கியா செல்டோஸில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினானது அதிகப்பட்சமாக 113 பிஎச்பி பவரையும் 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக இந்த காரில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. இந்த காரின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.9.69 லட்சத்தில் இருந்து ரூ.16.99 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அடுத்த இந்திய அறிமுக மாடலாக கார்னிவல் எம்பிவி மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த காருக்கான முன்பதிவுகள் எதுவும் இதுவரை துவங்கப்படாத நிலையில் டீலர்ஷிப்களில் ரகசியமாக முன்பதிவுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல்களையும் ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டுள்ளோம். அதனை விரிவாக காண கீழேயுள்ள லிங்கை அழுத்தவும்.

பொதுவாக கிறித்துமஸ், புதிய ஆண்டு துவக்கம் என்று டிசம்பர் மாதம் என்றாலே விற்பனை அதிகமாக நடைபெறும் மாதமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த மாதத்தில் கியா செல்டோஸ் மாடலின் விற்பனை இவ்வாறு பெரிய அளவில் சறுக்கி இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த புதிய ஆண்டின் முதல் மாதத்தில் செல்டோஸின் விற்பனை மீண்டும் எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








