லம்போர்கினி ஹூராகென் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழுவிபரம்
லம்போர்கினி ஹூராகென் காரின் புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி சூப்பர் கார் நிறுவனம் இந்தியாவில் சிறப்பான வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்த வளர்ச்சியை தக்க வைக்கும் விதத்தில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகளை வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

லம்போர்கினி ஹூராகென் காரின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய மாடல் ஹூராகென் எவோ என்ற பெயரில் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலாக வந்தது.

இந்த நிலையில், ஹூராகென் எவோ காரின் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலை இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் கூடுதல் தேர்வை வழங்கும் விதத்தில் இந்த மாடல் வந்துள்ளது.

இந்த காரின் ஏரோடைனமிக்ஸ் மிகச் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் புதிய ஸ்பிளிட்டர் அமைப்பு, பக்கவாட்டில் வெர்ட்டிக்கள் ஃபின் எனப்படும் காற்றுபுகும் அமைப்பு, முன்புறத்தில் பெரிய ஏர் இன்டேக் அமைப்பு, புதிய டிஃபியூசர் ஆகியவை இதற்கு சிறப்பான காற்றை கிழித்துச் செல்லும் வாய்ப்பை தருகிறது.

இந்த காரில் லம்போர்கினி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 609 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் மாடலைவிட 33 கிலோ எடை குறைவானதாக வந்துள்ளது.

எனினும், இந்த காரின் செயல்திறனும் குறைவாக உள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும். ஆல் வீல் டிரைவ் மாடலைவிட 0.4 வினாடிகள் கூடுதலாக எடுத்துக் கொள்கிறது. மணிக்கு 325 கிமீ வரை வேகத்தை தொடும் வல்லமை கொண்டது.

லம்போர்கினி ஹூராகென் எவோ ஆர்டபிள்யூடி மாடலில் பெர்ஃபார்மென்ட் டிராக்ஷன் கன்ட்ரோல் தொழில்நுட்பம் உள்ளது. ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட பல வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ஆர்டபிள்யூடி மாடலின் உட்புறத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த காரில் 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இணைய வசதி, போன் அழைப்புகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் வசதிகளை அளிக்கிறது.

இந்த காரின் உட்புறத்திற்கு அல்கான்ட்ரா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் இதனை தேர்வு செய்து கொள்ள முடியும்.

லம்போர்கினி ஹூராகென் எவோ காரின் ஆல் வீல் டிரைவ் மாடல் ரூ.3.73 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. ரியர் வீல் டிரைவ் மாடல் ரூ.3.22 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. அதாவது, குறைந்த விலை தேர்வாக நிலைநிறுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications








