ஊரடங்கில் தளர்வு... மீண்டும் சோதனை ஓட்டத்தை ஆரம்பித்த புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500...
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதால் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வருங்கால மாடல்களை சோதனை ஓட்டங்களில் உட்படுத்த ஆரம்பித்துள்ளன. இந்த வகையில் மஹிந்திரா நிறுவனம் அடுத்த வருடத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மாடலை சோதனையில் ஈடுப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள வீடியோவில் 2021 எஸ்யூவி500 மாடலானது, இதற்கு முன்னர் சோதனை ஓட்டங்களில் கொண்டிருந்த தோற்றத்தில் தான் காட்சியளிக்கிறது.

இருப்பினும் இன்னமும் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் உள்ள இந்த சோதனை கார் விற்பனை மாடலை சற்று நெருங்கியுள்ளது. குறிப்பாக இதில் உள்ள டெயில்லேம்ப்களை நிச்சயம் இதன் அறிமுகத்தின்போது எதிர்பார்க்கலாம்.

முன்னதாக புதிய மாசு உமிழ்வு விதி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்ததால் முக்கிய அப்டேட்களுடன் அடுத்த வருடத்தில் அறிமுகமாகவுள்ள இந்த இரண்டாம் தலைமுறை எக்ஸ்யூவி500 மாடலை பிஎஸ்6 தரத்தில் இந்த வருடத்தில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் போதே எக்ஸ்யூவி500 மாடலின் இரண்டாம் தலைமுறை கார் அடுத்த வருடத்தில் அறிமுகமாகவுள்ளதை இந்நிறுவனம் உறுதி செய்தது. இதனால் 2011ல் இருந்து விற்பனையில் உள்ள தற்போதைய முதல் தலைமுறை எக்ஸ்யூவி500 வெறுமனே பிஎஸ்6 தரத்திற்கு மட்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

புதிய மோனோகோக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மாடல் புதியதாக 2 லிட்டர் டீசல் என்ஜினை பெறவுள்ளது. தற்போதைய 2.2 லிட்டர் டீசல் என்ஜினை காட்டிலும் அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும் இந்த புதிய 2 லிட்டர் என்ஜினின் ஆற்றல் அளவுகள் காரின் அறிமுகத்தின்போது வெளியாகவுள்ளன.

தற்சமயம் விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி500 மாடலில் வழங்கப்படும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 155 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. இந்த இரு டீசல் என்ஜின் தேர்வுகளுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற இரு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் மஹிந்திராவின் இந்த 2021 மாடல் பெறவுள்ளது.
கூடுதலாக ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டத்தையும் புதிய எக்ஸ்யூவி500 மாடலின் டாப் வேரியண்ட்களில் எதிர்பார்க்கலாம். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் எக்ஸ்யூவி மாடலுக்கு எம்ஜி ஹெக்டர் (&ஹெக்டர் ப்ளஸ்), டாடா க்ராவிட்டாஸ் மற்றும் க்ரெட்டாவின் 7-இருக்கை வெர்சன் உள்ளிட்ட மாடல்கள் விற்பனையில் போட்டியினை தரவுள்ளன.


Click it and Unblock the Notifications








