மஹிந்திரா கார் வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்களுக்கான வாரண்டி மற்றும் இதர பராமரிப்பு ஒப்பந்தங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வர்த்தக நிறுவனங்கள், ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அனைத்து சேவைகளுமே கிட்டத்தட்ட முடங்கி இருக்கின்றன. கார் நிறுவனங்களும் தங்களது உற்பத்தி, விற்பனை மற்றும் சர்வீஸ் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.

அந்த வகையில், மஹிந்திரா நிறுவனத்தின் ஆலைகள் மற்றும் டீலர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போதைய சூழலில் பல வாடிக்கையாளர்களின் வாரண்டியை நீடிப்பதற்கான கால அவகாசம், ஆண்டு ஒப்பந்த பராமரிப்புப் பணிகளுக்கான காலக்கெடு முடிவடைகிறது.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், காலக்கெடு முடிவடைந்தாலும், ஒப்பந்த பராமரிப்புப் பணிகள், இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி கால சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மேலும், மஹிந்திரா வாகனங்களுக்கான சாலை அவசர உதவி திட்டம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து வழங்குவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், சமூக வலைத்தளங்களின் மூலமாக வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்கள் தொடர்ந்து நிவர்த்தி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக போராடுவதிலும், வாடிக்கையாளர் நலனை பேணுவதிலும் மஹிந்திரா முக்கிய பங்களிப்பையும், அறிவிப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தனது ஆலைகளில் வென்டிலேட்டர் உற்பத்தியை துவங்குவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது கார் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அறிவிக்கும் வகையில் கால நீட்டிப்பை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பலன் தரும் விஷயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








