இரண்டாம் தலைமுறை எக்ஸ்யூவி500-ல் இப்படிப்பட்ட தொழிற்நுட்பங்களா..! அதிரடிக்காட்ட தயாராகும் மஹிந்திரா
மஹிந்திரா ஃபன்ஸ்ட்டர் எலக்ட்ரிக் கான்செப்ட், ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி500-ன் அடுத்த தலைமுறை மாடலின் எலக்ட்ரிக் வெர்சனுக்கான முன்னோட்டமாக இந்த கான்செப்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள இந்த கான்செப்ட் மாடலின் புகைப்படங்களின் மூலம், கார்களுக்கு அப்டேட்டான டிசைன்களை வழங்குவதில் மஹிந்திரா நிறுவனம் கடந்த சில வருடங்களில் மிகுந்த அனுபவங்களை பெற்றிருப்பது தெரிய வருகிறது.

மேலும் எக்ஸ்யூவி500-ன் இரண்டாம் தலைமுறை காரின் முன்னோட்டாமாக இந்த கான்செப்ட் மாடல் கருதப்படுவதால் இதில் வழங்கப்பட்டுள்ள பெரும்பான்மையான டிசைன்களை எஸ்யூவி500-ன் அடுத்த தலைமுறை காரில் எதிர்பார்க்கலாம்.

மிகவும் முரட்டுத்தனமான டிசைனில் பாகங்களை கொண்டுள்ள இந்த கான்செப்ட் கார், முன்புறத்தில் நேர்த்தியான க்ரில் அமைப்புடன் எல்-வடிவிலான எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டரை பெற்றுள்ளது. க்ரிலுக்கு மேற்புறத்தில் மஹிந்திரா லோகோவிற்கு இரு புறத்திலும் ஸ்டைலிற்காக ஒளியை அளவாக வெளிப்படுத்தக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அலாய் சக்கரங்கள் கருப்பு மற்றும் நீல நிறத்தில் பெயிண்ட் அமைப்பை பெற்றுள்ளன. பின்புற எல்இடி விளக்குகள் ஒரே பாகமாக இந்த கான்செப்ட் வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் ஸ்போர்ட்டியான டிசைனில் காணப்படுவதற்கு இதுதான் மிக முக்கிய காரணமாக உள்ளது.

இதுமட்டுமின்றி உயர்ரக தோற்றத்திற்காக இந்த கான்செப்ட் மாடல், முன்புறத்தில் ஃப்ரேம்கள் இல்லாத விண்ட்ஷீல்டையும், வண்ணத்துப்பூச்சியின் இறக்கை வடிவிலான கதவுகளையும் கொண்டுள்ளது.

இந்த கான்செப்ட் காரில், ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் வீதம் மொத்தம் நான்கு எலக்ட்ரிக் மோட்டர்களை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் உள்ள 59.1 kWh பேட்டரி 308 பிஎச்பி பவரை காருக்கு வழங்கும் திறன் கொண்டது.

இந்த பேட்டரி சிங்கிள் சார்ஜில் சுமார் 520கிமீ வரை காரை இயக்கக்கூடிய ஆற்றல் உடையது. இந்த எலக்ட்ரிக் கான்செப்ட் மாடல் 0-லிருந்து 100 kmph என்ற வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும்.

இந்த ஃபன்ஸ்ட்டர் எலக்ட்ரிக் கான்செப்ட் மாடல், மஹிந்திரா நிறுவனம் இந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்த 4 எலக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றாகும். இதனால் இந்த எலக்ட்ரிக் கான்செப்ட் மாடலுடன் இ-கேயூவி100, இ-எக்ஸ்யூவி300 மற்றும் அடாம் க்வாட்ரிசைக்கிள் போன்ற எலக்ட்ரிக் வாகனங்களும் இந்நிறுவனத்தில் இருந்து காட்சிக்காக வைக்கப்படவுள்ளன.

கடந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் இருந்து இந்த ஆட்டோ எக்ஸ்போவிற்கு உள்ளாக, இடைப்பட்ட இரண்டு வருடங்களில் கார்களின் டிசைன் பிரிவில் தான் கற்றுக்கொண்டுள்ளதை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கும் விதமாக இந்த ஃபன்ஸ்ட்டர் கான்செட்டை மஹிந்திரா வெளியிட்டுள்ளது.

எக்ஸ்யூவி500 மாடலின் இரண்டாம் தலைமுறை கார் இதன் டிசைன்களைதான் அதிகளவில் ஏற்கவிருந்தாலும், தனக்கென தனி அடையாளங்களை அந்த கார் கண்டிப்பாக கொண்டிருக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








