செம பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!
அதிசெயல்திறன் மிக்க புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் முன்னோடி நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு வெகுவாக உயர்ந்து வரும் இவ்வேளையில், தனது சந்தையை வலுப்படுத்தும் முயற்சிகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதற்காக, 4 புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல்களை அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா காட்சிப்படுத்த இருக்கிறது. இதுகுறித்த செய்தியையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்திருப்பீர்கள்.

மஹிந்திரா கேயூவி100, எக்ஸ்யூவி300, எக்ஸ்யூவி500 அடிப்படையிலான மின்சார கார் கான்செப்ட் மாடல்களும், குவாட்ரிசைக்கிள் ரகத்திலான மின்சார வாகனமும் ஆட்டோ எக்ஸ்போவில் வர இருக்கின்றன.

இந்த செய்தியை தொடர்ந்து தற்போது மற்றொரு மாடல் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது, மஹிந்திரா நிறுவனம் அதிசெயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலையும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த இருக்கிறதாம்.

இந்த புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மஹிந்திரா ஃபன்ஸ்டர் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த அதிசெயல்திறன் மிக்க மின்சார காரில் 60kWh பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கிறதாம்.

இந்த கார் அதிகபட்சமாக 308 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்பதுடன், 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்திறன் மிக்க கார் மாடலை உருவாக்குவதற்கான அடிப்படை மாடலாக புதிய பிளாட்ஃபார்மில் இந்த கான்செப்ட் கார் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கும்.

இந்த கான்செப்ட் அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டால், அது இந்திய சந்தையில் மிக சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக இருக்கும்.

அதேசமயத்தில், இந்த செயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் கார் சந்தையில் மிக சவாலான விலையில் இந்த புதிய கார் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் நிச்சயம் ஆட்டோ எக்ஸ்போ வரும் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்று நம்பப்படுகிறது.

இதனிடையே, மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாடலை முதலில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் மஹிந்திரா திட்டம் வைத்துள்ளது. அடுத்த ஆண்டு எக்ஸ்யூவி300 அடிப்படையிலான மின்சார காரும், அதைத்தொடர்ந்து எக்ஸ்யூவி500 அடிப்படையிலான மின்சார காரும் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Autocar India


Click it and Unblock the Notifications








