அடக்கடவுளே... மஹிந்திரா நிறுவனமும் இதை செய்ய போகிறதா? வாடிக்கையாளர்கள் புலம்பல்...
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மஹிந்திரா நிறுவன வாகனங்களின் விலை உயரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வரும் ஜனவரி மாதத்தில் இருந்து வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் இன்று (டிசம்பர் 15) அறிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் அனைத்து பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையும் உயரவுள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை ஓரளவிற்கு ஈடுகட்டும் விதமாக வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்கள் மீதான விலை உயர்வு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் மஹிந்திரா நிறுவன வாகனங்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பது தெரியவில்லை. இதுகுறித்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியிடப்படும் என மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்திற்கு முன்னதாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவன கார்கள் மீதான விலை உயர்வும் வரும் ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வருகிறது. ஆனால் மஹிந்திரா நிறுவனத்தை போல் மாருதி சுஸுகி நிறுவனமும் விலை உயர்வு எவ்வளவு? என்பதை குறிப்பிடவில்லை.

இதுதவிர ஃபோர்டு மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுடைய கார்களின் விலையும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், ஹூண்டாய் கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதே சமயம் ஃபோர்டு நிறுவன கார்களின் விலை 3 சதவீதம் வரை உயர்கிறது.

மாருதி சுஸுகி, ஃபோர்டு, ஹூண்டாய் நிறுவனங்களின் வரிசையில் மஹிந்திரா நிறுவனமும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. புத்தாண்டில் கார்களின் விலையை உயர்த்தவுள்ள நிலையில், ஏராளமான புதிய தயாரிப்புகளையும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருகிறது.

இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்களின் புதிய தலைமுறை மாடல்கள் மிகவும் முக்கியமானவை. இந்த 2 பிரபலமான கார்களின் புதிய தலைமுறை வெர்ஷன்களையும் 2021ம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு அப்டேட்களுடன் இந்த இரண்டு கார்களும் விற்பனைக்கு வரவுள்ளன.

இதற்கு முன்னதாக நடப்பாண்டு அக்டோபர் 2ம் தேதி, தார் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த புதிய மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளதால், வாடிக்கையாளர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எனவே காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கான முயற்சிகளை மஹிந்திரா நிறுவனம் எடுக்க தொடங்கியுள்ளது. ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி500 கார்களின் புதிய தலைமுறை மாடல்கள் தவிர, எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








