மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் சென்னை விலை விபரம்
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலின் விலை விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. சென்னை எக்ஸ்ஷோரூம் விலை விபரம் மற்றும் இதன் பிஎஸ்6 எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியர்களின் விருப்பமான எஸ்யூவி மாடல்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்ப்பியோ. ஆளுமையான தோற்றம், இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான விலை போன்றவை இதற்கு தனி வாடிக்கையாளர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால், மஹிந்திரா இணையதளத்தில் விலை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலானது S5, S7, S9, S11 ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ரூ.11.98 லட்சம் முதல் ரூ.15.52 லட்சம் வரையிலான மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. சென்னையில் ரூ.12.56 லட்சம் முதல் ரூ.161.8 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் பிஎஸ்4 மாடலில் மூன்று டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. அதாவது, விலை குறைவான தேர்வாக 75 எச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனை வழங்கும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சினும், 120 எச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் விலக்கப்பட்டுள்ளது.

தற்போது மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலில் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 140 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பார்ட் டைம் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் நீக்கப்பட்டுவிட்டுள்ளதுடன், விலை குறைவான எஞ்சின் தேர்வும் நீக்கப்பட்டுள்ளது, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை தரலாம்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலானது பியர்ல் ஒயிட், நப்போலி பிளாக், மோல்டன் ரெட் மற்றும் டிசாட் சில்வர் ஆகிய 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலில் பிஎஸ்6 தவிர்த்து, வேறு எந்த மாற்றங்களும் இல்லை. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், அலாய் வீல்கள், முழுமையான ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஜிபிஎஸ் நேவிகேஷன் உள்ளிட்ட பல முக்கிய வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த எஸ்யூவியில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட், இன்டெலிபார்க் சிஸ்டம், எமர்ஜென்சி கால் அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு ஆன்லைன் மூலமாக ரூ.5,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். லாக் டவுன் முடிவுக்கு வந்த பின்னர் டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








