மஹிந்திரா டியூவி300 பிஎஸ்6 மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது!
கொரோனா பிரச்னையால் மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலின் வருகை தள்ளிப்போயுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த மாதம் 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. பிஎஸ்6 எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை அறிமுகப்படுத்துவதில் வாகன நிறுவனங்கள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், கொரோனா பிரச்னையால் பல மாடல்களின் அறிமுகம் தள்ளிப்போய் வருகிறது.

இந்த பட்டியலில் மஹிந்திரா நிறுவனத்தின் டியூவி300 எஸ்யூவியும் இணைந்துள்ளது. மஹிந்திரா டியூவி300 மற்றும் டியூவி300 ப்ளஸ் ஆகிய மாடல்களில் பிஎஸ்6 எஞ்சின் மட்டுமின்றி, சில வடிவமைப்பு மாற்றங்களுடன் வர இருக்கின்றன.

கடந்த மாதமே இந்த இரண்டு மாடல்களுமே விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த மாடல்களின் அறிமுகத்தை மஹிந்திரா சற்றே தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி மாடல்களின் முகப்பு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு வர இருக்கின்றன. புதிய க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், மறுவடிவமைப்பு பெற்ற பம்பர் அமைப்பு, புதிய டிசைனிலான சக்கரங்களுடன் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த காரின் இன்டீரியரிலும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சாஃப்ட் டச் பிளாஸ்டிக் டேஷ்போர்டு உள்ளிட்டவற்றுடன் சற்றே பிரிமீயம் மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கும். இதுதவிர்த்து, புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வர இருக்கின்றன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனுடன் வர இருக்கின்றன. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

மறுபுறத்தில் மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியில் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதாவது, ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட மாடல்களில் வழங்கப்படும் எஞ்சின் இதில் இடம்பெறுகிறது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்4 மாடல் ரூ.8.54 லட்சம் முதல் ரூ.10.55 லட்சம் வரையிலான விலையிலும், டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி ரூ.9.33 லட்சம் முதல் ரூ.11.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதனைவிட சற்றே கூடுதல் விலையில் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








