மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் வருகை குறித்து புதிய தகவல்!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் வருகை குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிரிமீயம் தேர்வாக அமைந்துள்ளது. பிரம்மாண்ட தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், நவீன தொழில்நுட்ப வசதிகள் என வாடிக்கையாளர்களின் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அடிப்படையிலான மின்சார மாடலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதாவது, இந்த ஆண்டு மத்தியில் அல்லது இரண்டாம் பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் அறிமுகம் அடுத்த ஆண்டுதான் என்று மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி வருவதற்கு இன்னும் ஓர் ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை எதிர்பார்த்து காத்திருந்தவர்களை ஆறுதல்படுத்தும் விதத்தில், அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியானது எஸ்210 என்ற பெயரில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் மாடலில் 40kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த காரின் பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து அதிகபட்சமாக 130 எச்பி பவரை வழங்கும் திறனை அளிக்கும்.

அதேபோன்று, இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நடைமுறையில் சிறந்த பயண தூரத்தை வழங்கும் என நம்பலாம்.

இந்த காருக்கான பேட்டரியை எல்ஜி கெம் தயாரித்து வழங்க இருக்கிறது. மேலும், இந்த எலெக்ட்ரிக் காருக்கு சாதாரண வீட்டு சார்ஜர் மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அதிக செயல்திறனை வழங்கும் விதத்தில் வருவதால், விலையும் கணிசமாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த கார் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும்.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








