மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் சென்னை விலை விபரம்
மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலின் விலை விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. சென்னை எக்ஸ்ஷோரூம் விலை மற்றும் பிஎஸ்6 எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை இந்த செய்தியில் படிக்கலாம்.

இந்தியர்களின் விருப்பமான எஸ்யூவி தேர்வுகளில் ஒன்றாகவும், மதிப்பு வாய்ந்த தேர்வாகவும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 இருந்து வருகிறது. மிட்சைஸ் ரகத்தில் 7 சீட்டர் மாடலாக கிடைப்பது இதன் முக்கிய அம்சமாக கூறலாம். இந்த நிலையில், பிஎஸ்6 எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

தற்போது கொரோனா பிரச்னையால் ஊரடங்கு அமலில் உள்ளதால், இணையதளம் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது மஹிந்திரா நிறுவனம். அதன்படி, எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலின் விலை விபரங்களை தனது இணையதளத்தில் மஹிந்திரா வெளியிட்டுள்ளது.

பிஎஸ் 4 மாடலில் வழங்கப்பட்டு வந்த W3 என்ற ஆரம்ப விலை கொண்ட பேஸ் வேரியண்ட்டும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் (W11 (O) AT) நீக்கப்பட்டுவிட்டது. பிஎஸ்6 மாடலானது W5, W7, W9 மற்றும் W11 (O) ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலானது ரூ.13.18 லட்சம் முதல் ரூ.17.68 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் சென்னையில் விற்பனைக்கு கிடைக்கும். பிஎஸ்4 வேரியணட்டுடன் ஒப்பிடுகையில், பிஎஸ்6 தரமுடைய எஞ்சினுடன் வரும் W5 வேரியண்ட்டின் விலை ரூ.27,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்டின் விலை ரூ.28,000 அதிகரித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலில் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 153 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே இனி கிடைக்கும்.

பிஎஸ்6 தர எஞ்சினை தவிர்த்து, வேறு பெரிய மாற்றங்கள் இல்லை. இந்த எஸ்யூவியில் சன்ரூஃப், ஸ்டேட்டிக் பென்டிங் ஹெட்லைட்டுகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அர்கமிஸ் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், புளூ சென்ஸ் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

மேலும், 6 ஏர்பேக்குKல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் சிஸ்டம் என பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் குறைவில்லாமல் வந்துள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு ரூ.5,000 முன்பணத்துடன் மஹிந்திரா தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். விரைவில் வர இருக்கும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா க்ராவிட்டாஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் இது நேரடியாக போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








