மாருதி டிசையர் காரில் விரைவில் புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகமாகிறது
மாருதி டிசையர் காரில் சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் தன்னிகரற்ற மாடலாக மாருதி டிசையர் விளங்குகிறது. அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் விற்பனையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போது மூன்றாம் தலைமுறை மாடலாக விற்பனையில் இருக்கும் மாருதி டிசையர் காருக்கு சந்தைப் போட்டியும் குறைவாக இல்லை.

எனவே, அவ்வப்போது கூடுதல் பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாருதி டிசையர் காரின் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

வடிவமைப்பில் மாற்றங்கள் மற்றும் புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் இந்த புதிய மாடல் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. முகப்பு டிசைனில் பல முக்கிய மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற இருக்கிறது.

அத்துடன், இந்த காரில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், பார்க்கிங் சென்சார்கள், முப்பரிமாண தோற்றத்தை தரும் சீட் கவர்கள், ஸ்மார்ட்பிளே தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய மாருதி டிசையர் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். வாய்ஸ் ரெககனிசன் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கும்.

உட்புறத்தில் அதிக தரத்திலான புதிய பாகங்கள் பயன்படுத்தப்படும். ஆட்டோ ஃபோல்டு ரியர் வியூ மிரர்கள், வண்ணத் திரை கொண்ட மல்டி இன்ஃபர்மேஷன் திரையும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

இந்த காரின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில், இந்த காரின் பின்புற பிரேக்குகள் மேம்படுத்தப்பட்டு இருக்கும்.

புதிய மாருதி டிசையர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தே்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த இரண்டு எஞ்சின்களும் விற்பனையில் இருந்து நீக்கப்பட இருக்கின்றன.

இதற்கு பதிலாக மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய 1.2 லிட்டர் டியூவல் விவிடி பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 88.7 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இது அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான மாசு உமிழ்வை கொண்ட தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது.

இந்த காரில் ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பம் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications