மாருதி இக்னிஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வரும் தேதி விபரம்
மாருதி இக்னிஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் இளம் வாடிக்கையாளர்களை குறிவைத்து மாருதி இக்னிஸ் கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. மாருதி ரிட்ஸ் காருக்கு மாற்றாக வந்த இந்த காரின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வகையில் இருக்கிறது.

இந்த நிலையில், மாருதி இக்னிஸ் கார் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடல் வரும் 7ந் தேதி ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய மாருதி இக்னிஸ் காரின் புரோஷர் ஏற்கனவே இணையதளம் மூலமாக கசிந்துவிட்டது. அதன்படி, புதிய இக்னிஸ் கார் சிக்மா, டெல்டா, ஸீட்டா மற்றும் அல்ஃபா ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் வர இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய மாருதி இக்னிஸ் காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். அதேபோன்று, சிக்மா பேஸ் வேரியண்ட்டை தவிர்த்து, பிற மூன்று வேரியண்ட்டுகளிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

புதிய மாருதி இக்னிஸ் காரில் டியூவல் ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் வசதி, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

புதிய மாருதி இக்னிஸ் காரின் வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும். முகப்பு க்ரில் அமைப்பு எஸ் பிரெஸ்ஸோ கார் போன்ற க்ரில் அமைப்பை பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

கருப்பு வண்ணத்திலான புதிய அலாய் வீல்கள் மற்றும் மறுவடிவமைப்பு பெற்ற ஃபாக்ஸ் ஸ்கஃப் பிளேட்டுகள், கருப்பு வண்ண பி பில்லர் அமைப்பு ஆகியவையும் முக்கிய விஷயங்களாக இருக்கின்றன.

இந்த காரில் ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகளுடன் வர இருக்கிறது.

புதிய மாருதி இக்னிஸ் காரின் விலை சற்றே கூடுதலாக நிர்ணயிக்கப்படும். மாருதியின் பட்ஜெட் கார்களில் இது பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும். இந்த கார் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








