விதிமீறலின் முழு உருவமாக மாறிய மாருதி ஆம்னி... ஆனாலும் இந்த கருப்பு ராட்சசன ரசிக்காம இருக்க முடியல!!
மாருதி ஆம்னி கார் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

Image Courtesy: the_r_p_m_shifter/Instagram
இந்திய வாகன மாடிஃபிகேஷன் உலகையே மெர்சலாக்குகின்ற வகையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆம்னி கார் உருமாற்றத்தைப் பெற்றிருக்கின்றது. மாருதி சுசுகி நிறுவனம் ஆம்னி கார்களை இந்தியாவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் ஈடுபடுத்தி வந்தது. புதிய பாதுகாப்பு விதிகள் மற்றும் புதுமுக கார்களின் வருகையால் இக்காரின் உற்பத்தி மற்றும் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டன.

இருப்பினும் தற்போதும் இக்காரை இந்தியர்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தினரைக் கருத்தில் கொண்டே மாருதி சுசுகி, ஆம்னியை இந்தியாவில் களமிறக்கியது. இதில், இட வசதி அதிகம் என்பதால் தாராளம் என்பதால் ஆறுக்கும் அதிகமானோர் பயணிக்க முடியும். இதனாலயே இக்கார் இந்தியாவில் வெற்றி பெற்ற மாடலாக இருந்தது.

ஆம்னியின் இந்த இடத்தைப் பிடிக்கின்ற வகையிலான மினி வேன் ரகத்திலான கார் இந்தியாவில் தற்போதும்கூட விற்பனைக்குக் கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால், ஆம்னியையும் மிஞ்சுகின்ற வகையில் எஸ்யூவி ரக கார்கள் நவீன தொழில்நுட்பங்களுடன் அண்மைக் காலங்களாக களமிறக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையில்தான் தற்போதைய நவீன யுக கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்கின்ற வகையில் மாருதி ஆம்னி உருமாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ஆம், தற்போது விற்பனைக்கு கிடைக்கும் புதுமுக வாகனங்களைக் காட்டிலும் பல மடங்கு கவர்ச்சியானதாகவும், ஸ்டைலானதாகவும் இந்த ஆம்னி காட்சியளிக்கின்றது.

இந்த உருமாற்றத்தை கேரளாவை மையமாகக் கொண்டு இயங்கும் கார்பன் ஆட்டமோட்டிவ் எனும் மாடிஃபிகேஷன் நிறுவனம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனம், மாருதி ஆம்னியின் உருவத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதேசமயம், உருமாற்றத்தை வெளிப்படுத்துகின்ற வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை மட்டும் கூடுதலாக சேர்த்துள்ளது.

இதில் மிக முக்கியமானதாக அமைந்திருப்பது ஆம்னியின் அடர் கருப்பு நிறம். ஜன்னல் மற்றும் பின்பக்க கண்ணாடிகள் கூட அடர் கருப்பு நிறத்திலேயே பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஆம்னியின் மேற்கூரையில் சுமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்ற வகையில் பெட்டி அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அடர் கருப்பு நிறத்திலேயேக் காணப்படுகின்றது.

இத்துடன், ஆம்னிக்கு ஆஃப் ரோடர் தோற்றத்தை வழங்கும் வகையில் அதன் டயர்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அது, காரின் உருவத்தில் இருந்து சற்று வெளியே நீண்டிருக்கின்ற வகையில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது, ஆம்னியின் கவர்ச்சியான தோற்றத்துடன் சேர்ந்து முரட்டுத் தனமான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த வீலில் பொருத்தப்பட்டிருக்கும் டயர்கள் வழக்கமான ஆம்னியில் இடம் பெற்றிருக்கும் டயர்களைப் போன்றதல்ல என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இது மிகவும் உயரம் குறைந்த ரக டயராகும். இந்த டயரைப் பொருத்தியிருப்பதனால் ஆம்னியின் உயரம் லேசாக குறைந்திருக்கின்றது.

மேலும், கூடுதல் முரட்டுத் தனமான தோற்றத்தை ஆம்னிக்கு வழங்கும் வகையில் பல்வேறு சிறப்பு அணிகலன்களை அந்த மாடிஃபிகேஷன் குழு பயன்படுத்தியிருக்கின்றது. அந்தவகையில், ஆம்னியின் பக்கவாட்டு பகுதியில் ஸ்கிட் பிளேட், நான்கு சைலென்சர் குழாய்கள், கஸ்டமைஸ் செய்யப்பட்ட பம்பர் மற்றும் மின் விளக்குள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் சந்தைக்கு பிறகான உதிரிபாகங்கள் ஆகும்.

ஆகையால், இக்காரில் பல்வேறு சட்டத்திற்கு புரம்பான பாகங்கள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி காரின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்படி, மியூசிக் சிஸ்டம், இருக்கைகள் மற்றும் கேபினின் நிறம் உள்ளிட்டவை மாற்றப்பட்டிருக்கின்றன. இதன் இருக்கை மிகவும் மிருதுவான, அதிக சொகசானதாக இருக்கின்றது. இது நீண்ட தூர பயணத்தின்போது உல்லாசமான பயண அனுபவத்தை வழங்கும்.

நாம் ஏற்கனவே கூறியதைப் போல் இந்த ஆம்னியில் பல்வேறு பாகங்கள் சந்தைக்கு பிறகானவையாக இருக்கின்றன. இவற்றை வாகனங்களில் பயன்படுத்துவது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். அதேபோன்று காரின் கண்ணாடிகள் விஷயத்தில் விதிகள் மீறப்பட்டிருக்கின்றது. தெளிவான பார்வையை வழங்கக்கூடிய கண்ணாடிகளே ஜன்னலாக பயன்படுத்த வேண்டும் போக்குவரத்து விதிகள் கூறுகின்றநிலையில், இந்த காரில் அனைத்து கண்ணாடிகளும் பார்வையை மறைக்கக்கூடிய வகையில் அடர் கருப்பி நிறத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு, பல்வேறு விஷயத்தில் மாருதி ஆம்னி விதி மீறி உருமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அதேசமயம் மிக முக்கியமாக மோட்டார் வாகன விதியின்படி, ஓர் வாகனத்தின் உண்மை தோற்றத்தை மழுங்கச் செய்கின்ற வகையில் மாற்றம் செய்வது குற்றமாகும். ஆகையால், இந்த கருப்பு நிற ராட்சச மாருதி ஆம்னி விதிமீறலின் முழு உருவமாக உருமாறியிருக்கின்றது. இருப்பினும், இதன் அழகை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications








