மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்
மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த ஏப்ரல் 1 முதல் பிஎஸ்6 எஞ்சினுடன் வாகனங்கள் விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதனால், அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்6 மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. இடையில் கொரோனா பிரச்னை காரணமாக, பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது லாக்டவுன் தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருப்பதால், வாகன விற்பனை மெல்ல மீண்டு வருகிறது. இதனை பயன்படுத்தி புதிய மாடல்களை கொண்டு வருவதில் கார், பைக் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், மாருதி சுஸுகி நிறுவனம் தனது எஸ் க்ராஸ் காரின் பிஎஸ்6 மாடலை கொண்டு வருவதற்கான தேதியை குறித்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வரும் 28ந் தேதி பிஎஸ்6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டீம் பிஎச்பிதள செய்தி தெரிவிக்கிறது.

மாருதி டீலர்களை சேர்ந்த விற்பனை அதிகாரிகளுக்கு இந்த கார் குறித்த பயிற்சியும் துவங்கப்பட்டுவிட்டதாக அந்த செய்தி தெரிவிக்கப்படுகிறது. இதனால், மேற்குறிப்பிட்ட தேதியில் கண்டிப்பாக விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பின்சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள், 60:40 ஸ்பிளிட் இருக்கை அமைப்பு, டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பெற்றிருக்கும்.

புதிய மாருதி எஸ் க்ராஸ் காரில் டீசல் எஞ்சின் நீக்கப்பட்டுள்ளது. தற்போது பிஎஸ்6 தரத்திற்கு இணையான புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் 104 பிஎச்பி பவரையும்,138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன.

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும். காம்பேக்ட் எஸ்யூவி கார்களுடன் போட்டி போடும். இது க்ராஸ்ஓவர் ரகத்தில் தனித்துவமான மாடலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








