மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது?
மாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் ஹைப்ரிட் மாடலின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, பிஎஸ்6 தரமுடைய எஞ்சின் தேர்வுகளில் கார்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி பிஎஸ்6 தரத்திற்கு இணையான எஞ்சினுடன் பெரும்பாலான கார்களை அறிமுகம் செய்துவிட்டது.

இந்த நிலையில், எஸ் க்ராஸ் எஸ்யூவி விற்பனையில் பெரிய அளவில் சோபிக்காததால், இந்த காரின் பிஎஸ்6 மாடலை அறிமுகம் செய்வதில் மாருதி ஆர்வம் காட்டவில்லை. எனினும், இந்த ரகத்தில் ஒரு கார் இருக்க வேண்டும் என்பதில், அந்த நிறுவனம் திடமாக உள்ளது.

எனவே, எஸ் க்ராஸ் எஸ்யூவியில் விரைவில் பிஎஸ்6 எஞ்சின் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, அடுத்த மாதம் பிஎஸ்6 எஸ் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கார்டாக் தளம் செய்தி தெரிவிக்கிறது.

இதுவரை மாருதி எஸ் க்ராஸ் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த எஞ்சின் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்படவில்லை. இதனையடுத்து, டீசல் எஞ்சினுக்கு பதிலாக, பெட்ரோல் எஞ்சின் தேர்வில் எஸ் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது.

மாருதி சியாஸ், எர்டிகா மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

மாருதி எஸ் க்ராஸ் கார் க்ராஸ்ஓவர் என்ற கலப்பு ரக வடிவமைப்பை பெற்றிருக்கிறது. இந்த காரில் வலிமையான பம்பர் அமைப்பு, ஸ்கிட் பிளேட், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், அலாய் வீல்கள், தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியானது மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும். ஏற்கனவே விற்பனையில் இருந்த டீசல் மாடலைவிட சற்றே குறைவான விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், இந்த புதிய எஸ்யூவி மாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடும். மாருதி மீதான நம்பகத்தன்மை இந்த காருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








