மாருதி பலேனோ காரில் சக்திவாய்ந்த புதிய எஞ்சின் தேர்வு... பரபரப்பு தகவல்கள்!
மாருதி பலேனோ காரில் சக்திவாய்ந்த புதிய எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் நம்பர்-1 மாடலாக மாருதி பலேனோ கார் உள்ளது. வடிவமைப்பு, வசதிகள், இடவசதி, பட்ஜெட் என அனைத்திலும் மிகச் சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களால் கருதப்படுகிறது.

தற்போது மாருதி பலேனோ காரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான இரண்டு விதமான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொரு டியூவல் விவிடி தொழில்நுட்பம் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த நிலையில், பலேனோ காரில் அடுத்து ஒரு பெட்ரோல் எஞ்சின் தேர்வை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்க இருப்பது தெரிய வந்துள்ளது. புதிய எஞ்சின் கொண்ட தேர்வு தற்போது சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக காடிவாடி தளம் ஸ்பை படங்களை வெளியிட்டு இருக்கிறது.

மாருதி பலேனோ காரில் ஆர்எஸ் என்ற மாடல் விற்பனையில் இருந்தது. இந்த மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்த எஞ்சின் 102 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஞ்சினையே தற்போது பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தி, பலேனோ காரில் அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதில் முக்கிய விஷயமாக, இந்த புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் ஆற்றல் மிக்க 48V ஹைப்ரிட் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதனால், அதிக மைலேஜ் மற்றும் குறைவான மாசு உமிழ்வு தரத்துடன் இந்த மாடல் களமிறக்கப்படும்.

பலேனோ காரில் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுக்கு கொடுக்கப்பட இருக்கும் இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தை பாஷ் நிறுவனம் உருவாக்கி இருப்பதாகவும், அந்நிறுவனமே இந்த காரை பெங்களூரில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருப்பினும், அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த புதிய எஞ்சின் தேர்வு வருமா என்பது குறித்த கூடுதல் தகவல்களை எதிர்பார்க்கலாம்.

மாருதி பலேனோ காரில் இந்த புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 48V ஹைப்ரிட் சிஸ்டம் நிச்சயம் சிறந்த தேர்வாக மாறும் என்று எதிர்பார்க்கலாம். ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் சந்தைப் போட்டியை சமாளிக்க ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயம் மாருதிக்கு இருந்து வருகிறது.

மாருதி பலேனோ கார் ரூ.5.63 லட்சம் முதல் ரூ.8.96 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








