மாருதி நிறுவனத்தின் வேறு எந்த காராலும் செய்ய முடியாத காரியத்தை அசால்டாக செய்த இக்னிஸ்... என்னனு தெரியுமா?
மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேறு எந்த காராலும் செய்ய முடியாத காரியத்தை இக்னிஸ் செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இக்னிஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை, மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இக்னிஸ் நன்கு பிரபலமடைவதற்கு ஃபேஸ்லிஃப்ட் உதவி செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி இக்னிஸ் கார் விற்பனையில் 133 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது!

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 1,692 இக்னிஸ் கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் 3,935 இக்னிஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் எந்தவொரு காராலும் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச விற்பனை வளர்ச்சி இதுதான்.

மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் விற்பனை இந்த அளவிற்கு மிக சிறப்பாக உயர்ந்திருப்பதற்கு ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்தான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், எல்இடி டிஆர்எல்கள் உடன் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

உட்புறத்தை பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகள் உடன் 7 இன்ச் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, 60:40 ஸ்பிளிட் வசதியுடன் பின் பக்க இருக்கைகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

மாருதி சுஸுகி இக்னிஸ் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்ய கூடியது. மாருதி சுஸுகி இக்னிஸ் காரில் இந்த ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் ஆரம்ப விலை 4.89 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.27 லட்ச ரூபாயாக உள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி நிறுவனம் மட்டுமல்லாது, ஃபோர்டு இந்தியா, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களும் புத்தாண்டு முதல் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதே சமயம் மஹிந்திரா நிறுவனம் தனது பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலைகளை வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து உயர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகன நிறுவனங்களை பொறுத்தவரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தனது தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்து வருவதன் காரணமாகவே வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications







