வாடிக்கையாளர்களுக்கு கார்களை டோர் டெலிவிரி செய்யும் மாருதி!
கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் உள்ள 600 மாருதி கார் டீலர்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன், கார்கள் டோர் டெலிவிரி செய்யப்படுகின்றன.

கொரோனா வைரஸால் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் சொல்லொண்ணா துயரத்தை தந்துள்ளன. பலரின் வாழ்வாதாரத்தையே புரட்டி போட்டு விட்டது. கொரோனா பரவுவதை தடுக்க, கடந்த மார்ச் மாதம் 24ந் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால், பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் வர்த்தக நிறுவனங்களை மீண்டும் திறக்க விதி தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் செயல்பட துவங்கி இருக்கின்றன. அந்த வகையில், கார் நிறுவனங்களும் தங்களது ஆலைகளில் உற்பத்தியை துவங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், டீலர்களை திறப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி, முதல்கட்டமாக டீலர்களை திறப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது. இதற்காக, டீலர்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் அறிவித்தது.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு நாடு முழுவதும் உள்ள 1,980 நகரங்களில் 3,080 டீலர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில், பல டீலர்கள் பெருநகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இவை ரெட் ஸோன் பகுதிகளில் உள்ளன. எனினும், கொரோனா பாதிப்பு இல்லாத பிற பகுதிகளில் டீலர்களை திறந்துள்ளது மாருதி.

கொரோனா பாதிப்பு இல்லாத மண்டலங்களில் உள்ள 600 டீலர்களை மாருதி சுஸுகி திறந்து கார் விற்பனையை மீண்டும் துவங்கி இருக்கிறது. இதில், 474 அரேனா கார் ஷோரூம்கள், 80 நெக்ஸா டீலர்கள், 45 வர்த்தக வாகன விற்பனை மையங்களும் அடங்கும்.

மேலும், முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வீட்டிற்கே சென்று டோர் டெலிவிரி கொடுக்கும் நடைமுறையையும் துவங்கி இருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் 55 கார்களை வாடிக்கையாளர்களின் வீடுகளில் டோர் டெலிவிரி கொடுத்துள்ளதாகவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் கார் விற்பனையை துவங்குவதற்கான முயற்சிகளிலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, அரசு நிர்வாகத்திடம் இருந்து சிறப்பு அனுமதியுடன் டீலர்களை மீண்டும் திறந்து கார் வர்த்தகத்தை துவங்க மும்முரமாக உள்ளது.

இதனிடையே, குர்கான் மற்றும் மானேசர் ஆலையை திறப்பதற்கான ஆயத்தப் பணிகளிலும் மாருதி சுஸுகி இறங்கி இருக்கிறது. இதில், மானேசர் ஆலை நகர எல்லைக்கு வெளியில் இருப்பதால், ஏற்கனவே அனுமதியை பெற்றுவிட்டது. மேலும், டீலர்களில் கார் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இருப்பு குறையும்பட்சத்தில் உடனடியாக கார் உற்பத்தியை துவங்குவதற்கு மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications







