மாருதி ஸ்விஃப்ட் காரில் விரைவில் புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம்?
மாருதி ஸ்விஃப்ட் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வு விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக மாருதி ஸ்விஃப்ட் நீண்ட காலமாக இருந்து வருகிறது. டிசைன், எஞ்சின், மைலேஜ், வசதிகள், விலை என அனைத்திலும் இந்த கார் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்குகிறது.

கடந்த ஏப்ரல் 1 முதல் புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததால், டீசல் மாடல் சந்தையிலிருந்து விலக்கப்பட்டது. தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், மாருதி ஸ்விஃப்ட் காரின் மீதான ஈர்ப்பை வாடிக்கையாளர் மத்தியில் தக்க வைக்கும் விதமாக, புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிக மைலேஜ் மற்றும் செயல்திறன் கொண்ட புதிய 1.2 லிட்டர் டியூவல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் தேர்வானது மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் (SHVS) கொண்டதாக வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

தற்போது வழங்கப்படும் 1.2 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இதனைவிட புதிய எஞ்சின் அதிக செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

கடந்த 2018ம் ஆண்டு புதிய தலைமுறை மாடலாக மாருதி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பு, வசதிகளில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. தொடர்ந்து மாருதி ஸ்விஃப்ட் கார் சிறப்பான விற்பனையை தக்க வைத்து வருகிறது.

குறிப்பாக, இதன் துள்ளலான வடிவமைப்பும், சிறந்த கையாளுமையையும் வழங்குகிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டின் சிறந்த தேர்வாக மாருதி ஸ்விஃப்ட் கார் இருந்து வருகிறது. இந்த நிலையில், புதிய பெட்ரோல் எஞ்சின் நிச்சயம் ஸ்விஃப்ட் காரின் மதிப்பை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி ஸ்விஃப்ட் காரின் பிஎஸ்6 பெட்ரோல் மாடலானது மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளிலும், ஏஎம்டி மாடலானது விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது. ரூ.5.19 லட்சம் முதல் ரூ.8.02 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








