கியா செல்டோஸ் காருக்கு போட்டியாளரை உருவாக்க ஜோடி போட்ட மாருதி, டொயோட்டா!
கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகளுக்கு நிகரான ரகத்தில் புதிய எஸ்யூவி மாடலை உருவாக்க மாருதி - டொயோட்டா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

மிட்சைஸ் எஸ்யூவி கார்களுக்கான சந்தை மிக வலுவான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்த ரகத்தில் வந்த எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் மற்றும் இதே விலை ரகத்தில் வந்த கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா போன்ற 5 சீட்டர் மாடல்கள் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்றிருக்கின்றன.

எனவே, இந்த சந்தையில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை வளைப்பதற்கு மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதற்கு தோதுவாக முதலீட்டை குறைக்கும் விதத்தில், தனது கூட்டணி நிறுவனமான டொயோட்டாவுடன் இணைந்து இந்த புதிய மிட்சைஸ் எஸ்யூவியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

தற்போது மாருதி வசம் இருக்கும் டொயோட்டா விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் மாற்றம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதற்கு அடுத்த ரகத்தில் மாருதி வைத்திருக்கும் எஸ் க்ராஸ் க்ராஸ்ஓவர் மாடலுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.

எனவே, இதனை விட பிரிமீயம் அம்சங்களுடன் புதிய எஸ்யூவி மாடலை உருவாக்க மாருதி சுஸுகியும், டொயோட்டாவும் திட்டமிட்டுள்ளன. இந்த புதிய எஸ்யூவி இரண்டு பிராண்டுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டமிட்டு உள்ளன.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உருவாக்கப்பட்ட சுஸுகியின் குளோபல் சி கட்டமைப்பு கொள்கையின் கீழ் இந்த புதிய மிட்சைஸ் எஸ்யூவி உருவாக்கப்பட உள்ளது.

மேலும், புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒப்பாக சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய மிட்சைஸ் எஸ்யூவி மாடலை உருவாக்க மாருதி - டொயோட்டா கூட்டணி திட்டமிட்டுள்ளது. அதாவது, க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெறும் வகையில் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு இருக்கும்.

மாருதி - டொயோட்டா பிராண்டுகளில் வர இருக்கும் புதிய எஸ்யூவி மாடலில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளதாம். அதேபோன்று, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் இடம்பெறும்.

வரும் 2022ம் ஆண்டு இந்த புதிய மிட்சைஸ் எஸ்யூவி மாடலானது மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா பிராண்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாம். ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் இடையிலான விலையில் இந்த புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








