புது மேக்கப், புது எஞ்சின்... கலக்கலாக வந்த புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்!
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படடு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனையில் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. டிசைன், நம்பகமான எஞ்சின், அதிக எரிபொருள் சிக்கனம், சரியான விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விரைவில் அமலுக்கு வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளால் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் இருக்கும் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இதற்கு மாற்றாக, தனது புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை இன்று ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது மாருதி கார் நிறுவனம்.

மாருதி எர்டிகா, சியாஸ் கார்களில் பயன்படுத்தப்படும் அதே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையம், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் தொழில்நுட்பத்திலும் கிடைக்கும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

புதிய பிஎஸ்-6 எஞ்சின் மட்டுமின்றி, வடிவமைப்பிலும், வசதிகளிலும் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களை பெற்றிருக்கிறது. முகப்பில் புதிய புரொஜெக்டர் ஹெட்லைட், க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் பம்பர் அமைப்பின்டிசைனில் மாற்றங்கள் கொடுக்கப்பட்டு புதுப்பொலிவுடன் வந்துள்ளது.

புதிய டிசைனிலான அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புற டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. தவிரவும், ஒற்றை வண்ணத் தேர்வு மற்றும் இரட்டை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரில் உட்புறம் முழுவதுமாக கருப்பு வண்ண இன்டீரீயர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு, இருக்கைகள், ஸ்டீயரிங் வீல் என அனைத்துமே கருப்பு வண்ணத்துடன் பிரிமீயமாக காட்சியளிக்கிறது. வண்ண தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மாருதியின் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ சிஸ்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

இந்த காரில் டாக்கோமீட்டர் மற்றும் மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகள் மூலமாக அலங்கரித்துக் கொள்ளவும், வசதிகளை கூட்டுவதற்கான வாய்ப்பை மாருதி வழங்குகிறது.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் பிஎஸ்-6 மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. விலை அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும். இந்த காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








