மின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...
கடந்த 2018ல் புதியதாக நான்கு ப்ளக்-இன் ஹைப்ரீட் மாடல்களை 2022ஆம் ஆண்டிற்குள்ளாக அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியிருந்த மஸராட்டி நிறுவனம் கடந்த ஆண்டில் இதில் முதலாவது மாடலாக கிப்லி ஹைப்ரீட் இருக்கலாம் என்றும் இது அடுத்து வருடம் அதாவது இந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகமாகலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தனது முதல் ஹைப்ரீட் மாடல் கிப்லி தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த காரை பற்றிய வீடியோ ஒன்றை மஸராட்டி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் மஸராட்டி நிறுவனத்தின் லோகோவுடன் காட்சியளிக்கின்ற கிப்லி காருக்கு ஆற்றலை மின்னல் வழங்குவது போன்று கற்பனையாக காட்டப்பட்டுள்ளது. புதிய கிப்லி ஹைப்ரீட் மாடல் இந்நிறுவனத்தின் மோடேனா தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளது.

தனது தயாரிப்பு லைன்அப் முழுவதையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ள மஸராட்டி நிறுவனம் இதற்காக 800 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. இதனால் 2022ல் புதிய ப்ளாட்ஃபாரம் உருவாகி முடியும் வரை இந்நிறுவனத்தில் இருந்து கிப்லி மற்றும் குவாட்ரோபோர்ட் செடான்களின் திருத்தியமைக்கப்பட்ட வெர்சன்கள் தான் அறிமுகமாகவுள்ளன.

இந்த வகையில் அடுத்த ஐந்து வருடத்திற்கு அறிமுகமாகவுள்ள தயாரிப்பு மாடல்களையும் ஏற்கனவே இந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதன்படி லெவண்டே எஸ்யூவி அப்டேட் செய்யப்படவுள்ளது. இது மட்டுமின்றி புதியதாக சிறிய அளவிலான எஸ்யூவி மாடல் ஒன்றையும் விரைவில் மஸராட்டி போர்ட்ஃபோலியோவில் 2022ஆம் ஆண்டிற்குள்ளாக பார்க்கலாம்.

முழுவதும் புதிய ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்படவுள்ள புதிய லெவண்டே எஸ்யூவி, கிப்லி மற்றும் குவாட்ரோபோர்ட் மாடல்களுடன் முதன்முறையாக எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்ட என்ஜின் அமைப்பை பெறவுள்ளது. இந்திய சந்தையை பொறுத்தவரையில் தற்சமயம் மஸராட்டி நிறுவனத்தில் இருந்து ட்வின்-டர்போ வி6 பெட்ரோல் என்ஜின் உடன் கிப்லி மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் என்ஜினை இந்நிறுவனத்தின் பவர்ட்ரெய்ன் குழு வடிவமைத்து இருந்தாலும், இத்தாலியின் மரனெல்லோ பகுதியில் உள்ள ஃபெராரி நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிஎஸ்6 தரத்தில் வழங்கப்பட்டு வருகின்ற இந்த பெட்ரோல் என்ஜின் உடன் நியூமேடிக் வால்வுகளால் கண்ட்ரோல் செய்யப்பட்ட புதிய எக்ஸாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் தற்போதைய கிப்லி மாடலின் வி6 என்ஜினானது, ஹைட்ராலிக் ரோலர் ஃபிங்கர் ஃபோல்லோவெர்ஸ் உடன் வால்வு கண்ட்ரோல் தொழிற்நுட்பம், 4-கேம் பேஸர்கள், ட்வின்-டர்போசார்ஜிங் மற்றும் நேரடி இன்ஜெக்ஷன் தொழிற்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








