விலை குறைவான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார் அறிமுக விபரம்!
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய சொகுசு கார் சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனையில் நம்பர்-1 ஆக இருந்து வருகிறது. போட்டியாளர்கள் நெருங்கிவிடாத வகையில் தனது வர்த்தகத்தை வலுவாக கொண்டு செல்லும் விதத்தில், பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அந்நிறுவனத்தின் விலை குறைவான சொகுசு கார் மாடல்களில் ஒன்றான ஏ க்ளாஸ் காரின் அடிப்படையிலான செடான் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுவரை மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ செடான் கார்தான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் குறைவான விலை செடான் கார் மாடலாக இருக்கிறது.

இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏ க்ளாஸ் செடான் கார் சிஎல்ஏ செடான் கார் மாடலைவிட விலை குறைவான மாடலாக நிலைநிறுத்தப்படும் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் காரின் டிசைன் வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது. உட்புறத்தில் இரண்டு திரைகளுடன் கூடிய டேஷ்போர்டு அமைப்பு இடம்பெற்றிருக்கிறது.

இதில், ஒரு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான திரையாகவும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என இரண்டு பெரிய திரைகளை இதன் டேஷ்போர்டு பெற்றிருக்கும்.

இந்த காரில் முக்கிய அம்சமாக விமான எஞ்சின்கள் போன்ற தோற்றத்தை வழங்கும் ஏர் வென்ட்டுகளும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என நம்பலாம்.

புதிய ஏ க்ளாஸ் கார் ரூ.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், சகனில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் இந்த கார் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும்.

அண்மையில் ஏ க்ளாஸ் ஹேட்ச்பேக் கார் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக இந்த செடான் கார் மாடல் கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. ஸ்கோடா சூப்பர்ப், ஹோண்டா அக்கார்டு மற்றும் ஆடி ஏ3 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








