மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது.

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் நம்பர்-1 கார் தயாரிப்பு நிறுவனமாக மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளது. இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு இந்தியாவில் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு இந்த சந்தையில் முன்கூட்டியே கால் பதித்து விட வேண்டும் என்ற முனைப்பில் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனது EQC எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது. கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிமுகத்தை தள்ளிப்போட்டது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனாவால் இந்த காரின் அறிமுகம் மீண்டும் தள்ளிப்போனது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிஎல்எஸ் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின்போது கருத்து தெரிவித்திருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியப் பிரிவு அதிகாரி மார்ட்டின் ஷ்வென்க்,"EQC எலெக்ட்ரிக் எஸ்யூவியை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, அடுத்த சில வாரங்களில் புதிய EQC எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரின் அடிப்படையிலான மின்சார மாடலாக உருவாக்கப்ப்டடு இருக்கிறது.

இந்த காரின் முன்புற மற்றும் பின்புற ஆக்சில்களில் தலா ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வருகிறது. இந்த மின் மோட்டார்கள் அதிகபட்சமாக 408 பிஎஸ் பவரையும், 765 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும்.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் காரில் 80kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி 652 கிலோ எடை கொண்டது. இந்த காரின் பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து 376 கிமீ முதல் 417 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். எனினும், நடைமுறையில் சற்றே இதன் ரேஞ்ச் குறைவாக இருக்கலாம்.

இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 2.3kW சார்ஜர் மூலமாக 41 மணிநேரமும், 7.4kW சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 11 மணிநேரமும் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 40 நிமிடங்கள் பிடிக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC கார் ஜெர்மனியில் உள்ள பிரெமென் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும். ஜெர்மனியில் ரூ.59,900 யூரோ விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரூ.1.25 கோடி என்ற விலை நி்ரணயிக்கப்படலாம்.
இந்தியாவின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியை மூலமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








