புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே காரின் ஃபேஸ்லிஃபட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

முதல் தரிசனம்
கடந்த ஆண்டு இறுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யூவியின் அடிப்படையிலான கூபே ரக மாடல் புதுப்பொலிவுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய அறிமுக நிகழ்ச்சி
பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன், புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த கார் இந்தியாவிலும் வருவது உறுதியானது. இந்த நிலையில், இன்று பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியின் மூலமாக ஜிஎல்சி கூபே மாடல் இந்தியாவில் இன்று முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கூபே ரக எஸ்யூவி
எஸ்யூவியும், கூபே ரக காரின் வடிவமைப்பையும் கலந்து கட்டிய டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, முன்புறம் எஸ்யூவி கார்களுக்கு உரிய தோரணையும், பின்புறத்தில் சரிந்த கூரை அமைப்புடன் இந்த கார் வந்துள்ளது.

முக்கிய அம்சங்கள்
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர் அமைப்புகள், வைர கற்கள் போன்ற க்ரில் அமைப்பு, புதிய டிஃபியூசர், எல்இடி டெயில் லைட்டுகள் வெளிப்புறத்தில் முக்கிய அம்சங்களாக உள்ளன.

உட்புற அம்சங்கள்
இந்த காரில் புதிய 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த காரில் எம்பியூஎக்ஸ் என்ற பிரத்யேக செயலியில் இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் செயல்படுகிறது.

தொழில்நுட்ப அம்சங்கள்
இந்த காரில் ட்ரெயிலரை பின்புறமாக நகர்த்தும்போது பயன்படும் மானுவரிங் ரிவர்ஸ், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சமயங்களில் முன்னால், பின்னால் வரும் வாகனங்கள் நெருக்கமாக வருவதை எச்சரிக்கும் வசதிகள் உள்ளன. இந்த காரில் 360 டிகிரி கேமராவும் உள்ளது.

எஞ்சின் விபரம்
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே காரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் (GLC Coupe 300) மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் (GLC 300d) தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 194 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டீசல் எஞ்சின்
டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 192 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் 9ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

விலை விபரம்
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.62.7 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடலுக்கு ரூ.63.7 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போர்ஷே மசான் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்4 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications