வீடு போன்று தங்குவதற்கான சகல வசதிகளுடன் ஒரு அசத்தலான சொகுசு கார்... மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம்!
படுக்கை வசதியுடன் கூடிய புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சந்தையை வலுவாக்கும் பொருட்டு பல புதிய சொகுசு கார் மாடல்களை இந்தியாவில் வரிசை கட்டி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காரின் புதிய மாடலை இன்று ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து அறிமுகம் செய்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் மார்க்கோ போலோ என்ற பெயரில் இந்த புதிய மாடல் குறிப்பிடப்படுகிறது. வெளியூர் பயணங்கள் மற்றும் சாகசப் பயணங்களின்போது இரவு தங்குவதற்கு கூடாரம் வசதியுடன் கூடிய இந்த கார் நடமாடும் இல்லம் போன்று பயன்படுத்த முடியும்.

இந்த கார் இரண்டு விதமான மாடல்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மார்க்கோ போலோ ஹரிஸான் மாடலுக்கு ரூ.1.38 கோடி எக்ஸ்ஷோரூம் விலையும், மார்க்கோ போலோ என்ற மாடலுக்கு ரூ.1.46 கோடி எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் இருக்கைகளை படுக்கையாக மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது. அத்துடன் மேலே கூரை அமைப்பு கூடாரம் போல மாற்றும் வசதி கொண்டது. கூடார அமைப்பிலும் மடக்கி வைக்கும் வகையிலான படுக்கை வசதி உள்ளது. எனவே, இரவில் தங்குவதற்கு இடத்தை தேடி அலைய வேண்டி இருக்காது. இதன் பின் இருக்கைகளை படுக்கை போல மாற்றிவிடலாம்.

அத்துடன், காருக்குள் இருந்தே மேலே உள்ள படுக்கைக்கு செல்லும் வசதி இருப்பதால், பாதுகாப்பானதாகவும் இருக்கும். இந்த காரில் படுக்கை வசதி மட்டுமின்றி, கேஸ் ஸ்டவ், பொருட்களை வைக்க ஸ்டோரேஜ் அறைகளும் உள்ளன. எனவே, சமைத்து சாப்பிட்டு இரவு தங்குவதற்கான வசதியை இந்த கார் வழங்கும்.

நடமாடும் இல்லம் போன்ற இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஜி டிரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கார் 5,370 மிமீ நீளம் கொண்டது. இதன் வீல் பேஸ் நீளம் 3,430 மிமீ ஆக உள்ளது. இந்த காரில் மல்டி பங்ஷன் ஸ்டீயரிங் வீல், வாய்ஸ் கமாண்ட் வசதி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா கண்காணிப்பு ஆகிய வசதிகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications








