மிகவும் குறைவான எடையில் தயாராகும் மெர்சிடிஸின் புதிய ஸ்போர்ட்ஸ் கார்... இந்தியாவில் அறிமுகமாகுமா...?
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராண்ட் ஜிடி ப்ளாக் சீரிஸ் ஸ்போர்ட்ஸ் காரை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி ப்ளாக் சீரிஸ் இன்றைய நிலவரப்படி ஏஎம்ஜி ப்ராண்டில் இருந்து வி8 என்ஜின் உடன் தயாரிக்கப்பட்டு வரும் ஆற்றல்மிக்க ஸ்போர்ட்ஸ் காராக விளங்குகிறது. வெளிப்புறத்தில் ப்ளாக் ஜிடி சீரிஸ் கார் மற்ற ஜிடி மாடல்களுடன் ஒப்பிடும்போது சில எடை குறைவான பாகங்களை பெற்றுள்ளது.

ஏனெனில் இதன் வெளிப்புறத்தில் கார்பன் ஃபைபர் உலோகத்தின் பயன்பாடு தான் அதிகளவில் உள்ளது. பொனெட், மேற்கூரை, டெயில்கேட், ட்ரான்ஸ்மிஷன் மௌண்ட் உள்பட ட்ரைவ்ஷிஃப்ட் கூட கார்பன் ஃபைபரால் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி குறைவான எடையில் சக்கரங்கள் மற்றும் ப்ளாக் சீரிஸ்-சிறப்பு பாகங்களுடன் பீங்கான் ப்ரேக்குகளையும் இந்த கார் பெற்றுள்ளது. இவற்றுடன் காரின் மொத்த எடையை குறைக்கும் விதமாக மெல்லிய முன்புற மற்றும் பின்புற விண்ட்ஷீல்டை தயாரிப்பு நிறுவனம் பொருத்தியுள்ளது.

அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சுருள்-ஓவர் சஸ்பென்ஷன் அமைப்பானது ஜிடி ப்ளாக் சீரிஸ் காரில் அடாப்டிவ் டேம்பிங் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திட பின்புற விஸ்போன் ப்ரேம்களையும் இந்த ஸ்போர்ட்ஸ் கார் நேரடியாக ஏஎம்ஜி மோட்டார்ஸ்போர்ட் ப்ரோகிராமில் இருந்து எடுத்து கொண்டுள்ளது.

இது காரின் ஸ்டேரிங்கின் கூர்மை பண்பை மேம்படுத்தும். காரின் மொத்த எடை குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில் ஜிடி ப்ளாக் சீரிஸ் காரில் இரட்டை-டர்போசார்ஜ்டு 4.0 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 728 பிஎச்பி பவரையும் 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. அதிகளவில் மாடிஃபைடு செய்யப்பட்டு இந்த ஜிடி ஸ்போர்ட்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ள வி8 என்ஜினிற்கு வழக்கமான ஜிடி மாடல்களில் இருந்து வேறுபடுவதற்காக அடையாளமாக என்ஜின் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்போர்ட்ஸ் காரில் சிறப்பம்சங்களாக புதிய காம்ஷாஃப்ட்ஸ், உராய்வை குறைக்கும் உருளைகள், பெரிய இண்டர்கூலர் மற்றும் அப்டேட்டான எக்ஸாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 0-விலிருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 3.2 வினாடிகளிலும் 200kmph வேகத்தை 9.0 வினாடிகளிலும் புதிய ப்ளாக் ஜிடி சீரிஸ் கார் அடைந்துவிடும்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராண்ட்டின் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரின் அதிகப்பட்ச வேகம் 325 kmph ஆகும். இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஈர்க்கக்கூடிய லாஞ்ச் ஸ்டார்ட்ஸிற்கு திருத்தியமைக்கப்பட்ட ரேஸ் ஸ்டார்ட் செயல்பாட்டையும் இந்த கார் பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் ஜிடி ப்ளாக் சீரிஸ் கார் அறிமுகப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. தற்சமயம் இந்த ப்ராண்ட்டில் இருந்து அப்டேட் செய்யப்பட்ட ஏஎம்ஜி ஜிடி ஆர் மற்றும் ஏஎம்ஜி 63 எஸ் ஜிடி 4-கதவு கார்கள் முறையே ரூ.2.48 கோடி மற்றும் ரூ.2.42 கோடி என்ற எக்ஸ்ஷோரூம் விலைகளுடன் விற்பனையில் உள்ளன.


Click it and Unblock the Notifications








