கியா கார்னிவலுக்கு போட்டி ஆரம்பம்...குறைந்த விலை எம்ஜி ஜி10 எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!
கியா கார்னிவல் காருக்கு போட்டியளிக்கின்ற வகையில் எம்ஜி நிறுவனம் ஜி10 என்ற புத்தம் புதிய எம்பிவி காரை இந்தியாவில் காட்சிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தென் கொரிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்த பின்னர் இரண்டாவது மாடலாக புதிய கியா கார்னிவல் என்ற எம்பிவி ரக காரை களமிறக்கியுள்ளது. இது சொகுசு கார்களுக்கு இணையான பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றிருப்பதால் இந்தியர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்த காருக்கு போட்டியளிக்கின்ற வகையிலான மாடலை அண்மையில் இந்தியாவில் களமிறங்கிய எம்ஜி நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் கியா கார்னிவல் எம்பிவி-யைக் காட்டிலும் மிக குறைந்த விலைக் கொண்ட என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில், எம்ஜி ஜி10 என்ற எம்பிவி ரக காரைதான் எம்ஜி நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. இது, தற்போது சீனாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அங்கு இந்திய மதிப்பில் ரூ. 13 லட்சம் என்ற விலையில் விற்கப்படுகின்றது. ஒரு வேலை இது இந்தியாவில் களமிறக்கப்படுமேயானால் ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையிலே களமிறக்கப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது.

தொடர்ந்து, தற்போது விற்பனையில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கும் கியா கார்னிவலைக் காட்டிலும் ஐந்து லட்சம் ரூபாய் வரை குறைந்த விலையில் களமிறக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. மேலும், இந்த கார் மிக விரைவில் இந்திய எம்பிவி சந்தையில் புரட்சி செய்வதற்காக களமிறக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

எம்ஜி நிறுவனத்தின் இந்த ஜி10 எம்பி மாடலானது கியா கார்னிவலுக்கு மட்டுமின்றி டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா உள்ளிட்ட பிரபல மாடல்களுக்கும் போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கின்றது.
அதற்கேற்ப வகையில் பல்வேறு சொகுசு மற்றும் பிரிமியம் வசதிகளை இந்த கார் உள்ளடக்கியதாக காட்சியளிக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்த காரில் 7, 8 மற்றும் 9 என மூன்று விதமான இருக்கை தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

இதுமட்டுமின்றி, 3 பாகம் கொண்ட பனோரமிக் சன்ரூஃப், குரல் கட்டளை போன்ற வசதிகளை எம்ஜி ஐ-ஸ்மார்ட் தொழில்நுட்பம் வாயிலாக அந்நிறுவனம் வழங்க இருக்கின்றது. இந்த தொழில்நுட்பத்தின் 2.5 வெர்ஷன் ஜி10 காரில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது, காருடன் உரையாடுவதற்கான தானியங்கி சேட்டிங் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியிருக்கின்றது.

இத்துடன், இதன் டேஸ்போர்டில் 10.1 டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து, மடிக்கணினியை சார்ஜ் செய்கின்ற வகையிலான 220 வோல்ட் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சொகுசு வசதிக்காக காரின் பின் மற்றும் பக்கவாட்டு கதவுகளை எலக்ட்ரானிக் பட்டன் மூலம் ஓபன் மற்றும் க்ளோஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சைனாவில் மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் எம்பிவி காரைதான் எம்ஜி ரீபேட்ஜ் செய்து ஜி10 என்ற பெயரில் இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது.

இந்த மேக்ஸஸ் ஜி10 கார் சீனாவில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.9 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் 220 பிஎஸ் திறனையும், 345 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
இதேபோன்று, டீசல் எஞ்ஜின் 147 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

இந்த கார் எப்போது இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கின்றது என்ற அதிகாரப்பூர்வமான இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், மிக விரைவில் இந்த கார் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








