எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி இந்தியாவில் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது என்பது குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் சூப்பர் ஹிட் மாடலாக எம்ஜி ஹெக்டர் மாறி இருக்கிறது. டிசைன், சிறப்பம்சங்கள், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக உள்ளது.

இந்த நிலையில், அண்மையில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடலானது காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த மாடலானது எம்ஜி ஹெக்டர் பிரியர்கள் மற்றும் மிட்சைஸ் எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி வரும் ஜூலை - செப்டம்பர் இடையிலான இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும், ஆட்டோ எக்ஸ்போவில் 6 சீட்டர் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டாலும், இந்த கார் 7 சீட்டர் தேர்விலும் வர இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியைவிட அதன் ப்ளஸ் வெர்ஷனில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாடலில் பளபளப்பான கருப்பு வண்ண பூச்சுடன் க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், பாடி கிளாடிங் சட்டங்களுடன் பம்பர் அமைப்பு இடம்பெற்றுள்ளன.

மேலும், ஹெக்டர் எஸ்யூவியில் டெயில் லைட் க்ளஸ்ட்டர்களை இணைக்கும் லைட் பார் இருக்கும் நிலையில், இந்த மாடலில் அது இடம்பெறவில்லை. புதிய பம்பர் மற்றும் புகைப்போக்கி குழாய் அமைப்புகளும் இதன் முக்கிய மாற்றஙாக இருக்கின்றன.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 143 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்டிலும் கிடைக்கிறது.

இதன் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

ரூ.14 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் விரைவில் வர இருக்கும் டாடா கிராவிட்டாஸ் 7 சீட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








