கொரோனாவாவது ஒண்ணாவது... ஹெக்டர் ப்ளஸ் அறிமுகத்தில் திடமாக இருக்கும் எம்ஜி!
கொரோனா பிரச்னை தலை விரித்தாடும் நிலையில், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் க்ளோஸ்டர் எஸ்யூவிகள் திட்டமிட்டபடி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பிரச்னையால் வாகன நிறுவனங்கள் தவித்து வருகின்றன. மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை செய்துள்ள அந்த நிறுவனங்கள் கொரோனா பிரச்னை ஊரடங்கால் ஆலைகளை மூடி வைத்துள்ளன. இதனால், நாள் தோறும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை ஒவ்வொரு நிறுவனமும் சந்தித்து வருகின்றன.

அதேநேரத்தில், கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் அரசாங்கம் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு தேவையான விஷயங்களில் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றன. அதேபோன்று, வாடிக்கையாளர் நலன் கருதியும் பல்வேறு கூடுதல் கால அவகாச திட்டங்களையும் அறிவித்துள்ளன.

கொரோனா பிரச்னையால் உலகின் பிரபலமான வாகன கண்காட்சிகள், விளையாட்டு மற்றும் மோட்டார் பந்தயங்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிய கார், பைக் அறிமுகங்களையும் ஒத்தி வைத்து வருகின்றன.

இந்த நிலையில், எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய கார்களை அறிமுகத்தை திட்டத்தில் எந்த மாறுதல்களும் இருக்காது என்று தெரிவித்துள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஹெக்டர் ப்ளஸ் மற்றும் க்ளோஸ்டர் எஸ்யூவி மாடல்களை ஏற்கனவே திட்டமிட்டது போன்று குறித்த காலத்தில் களமிறக்கவும் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டது போன்று அடுத்த மூன்று மாதங்களில் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியும், நவம்பரில் க்ளோஸ்டர் எஸ்யூவியும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக எம்ஜி மோட்டார் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதில், ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியானது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் 5 சீட்டர் எஸ்யூவியின் 6 அல்லது 7 சீட்டர் மாடல்களாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இது மஹந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் விரைவில் எதிர்பார்க்கப்படும் டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.

அதேபோன்று, மேக்சஸ் டி90 எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியும் நவம்பரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடலானது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு நிகரான சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இதுதவிர்த்து, ஜி10 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் புத்தம் புதிய கார் மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலானது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்ப உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

கார் அறிமுகம் மட்டுமில்லை, இந்த மோசமான சூழலில், பணியாளர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படாது என்ற உறுதியையும் எம்ஜி மோட்டார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குறைவான விலையில் வென்டிலேட்டர் என்ற செயற்கை சுவாச கருவியை உருவாக்குவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








