எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவிக்காக காத்திருப்பவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி குறித்த மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர் சிறந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் ரகத்தில் மிகவும் பெரிய கார் மாடல் என்பதுன், டிசைன், வசதிகளில் போட்டியாளர்களை விஞ்சி நிற்பதுடன், விலையும் மிக சரியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த ரகத்தில் அதிக மதிப்புவாய்ந்த மாடலாக உள்ளது.

இந்த நிலையில், மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மட்டுமே சிறந்த 7 சீட்டர் மாடலாக இருந்து வருகிறது. எனவே, இந்த ரகத்தில் ஹெக்டர் எஸ்யூவியை 7 சீட்டர் மாடலாக கொண்டு வந்தால், நிச்சயம் அதிக மதிப்பை பெறும் என்று எம்ஜி முடிவு செய்தது.

அதன்படி, ஹெக்டர் ப்ளஸ் என்ற பெயரிலான 6 சீட்டர் மாடலை கடந்த பிப்ரவரி மாதமே ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து வெளியிட்டது எம்ஜி மோட்டார். ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, இந்த காரின் அறிமுகம் தள்ளிப் போய் வருகிறது. இந்த நிலையில், ஜூலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த நிலையில், விரைவில் விற்பனைக்கு வருவதை உறுதி செய்யும் வகையில், ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியானது எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த காருக்காக காத்திருப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. 5 சீட்டர் ஹெக்டர் எஸ்யூவியைவிட சில மாறுதல்களுடன் ஹெக்டர் ப்ளஸ் வர இருக்கிறது.

ஹெட்லைட்டுகள், க்ரில், டெயில் லைட்டுகள் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, உட்புறத்தில் மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கு தக்கவாறு ஹெக்டரைவிட 40 மிமீ கூடுதல் நீளத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது ஹெக்டர் ப்ளஸ்.

6 சீட்டர் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் இடம்பெற்றுள்ளது. மூன்றாவது வரிசை இருக்கை பெஞ்ச் இருக்கையாக உள்ளது. ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலில் நடுவரிசை மற்றும் மூன்றாவது வரிசையில் பெஞ்ச் இருக்கை அமைப்பு இடம்பெற்றிருக்கும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காருக்கு போட்டியாக இருக்கும் என்று எம்ஜி மோட்டார் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இந்த புதிய மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் கூடுதலாக 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆகியவை கூடுதல் தேர்வுகளாக இருக்கிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் சன்ரூஃப், ஐ-ஸ்மார்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி ரூ.14 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஹெக்டர் ப்ளஸ் வேரியண்ட்டுகளைவிட ரூ.1 லட்சம் கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மாற்றான தேர்வாக இதனை நிலைநிறுத்த எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








