எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம் வெளியானது
மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் வேரியண்ட் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு ஹெக்டர் எஸ்யூவியை இந்தியாவில் முதல் மாடலாக விற்பனைக்கு கொண்டு வந்தது. ஹெக்டர் எஸ்யூவிக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் ஹெக்டர் ப்ளஸ் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோமொபைல் கண்காட்சியில் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. கொரோனாவால் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் அறிமுகம் சற்றே தாமதமான நிலையில், அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது.

இந்த நிலையில், எஸ்யூவியில் வழங்கப்பட இருக்கும் வேரியண்ட்டுகள் விபரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களில் மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மேலும், 6 சீட்டர் மாடல் மட்டுமில்லாமல், 7 சீட்டர் தேர்விலும் வர இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடலில் நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். 7 சீட்டர் மாடலில் சாதாரண பெஞ்ச் இருக்கை பொருத்தப்பட்டு இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

தற்போது கார்வாலே தளம் வெளியிட்டுத் தகவல்களின்படி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலானது சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் வர இருப்பது தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், 7 சீட்டர் மாடலானது ஸ்டைல் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

ஹெக்டர் 5 சீட்டர் மாடலில் இருந்து புதிய 6 சீட்டர் மாடலை வேறுபடுத்தும் விதத்தில் வடிவமைப்பில் மாறுதல்களுடன் கூடிய க்ரில், ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். மூன்று வரிசை இருக்கை அமைப்புக்கு ஏற்றவாறு காரின் நீளத்திலும், உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஹெக்டர் போன்றே ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியிலும் ஏராளமான வசதிகள் உள்ளன. அதிக சிறப்பம்சங்கள் கொண்ட புதிய கனெக்டெட் கார் தொழில்நுட்பத்துடன் கூடிய 10.4 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 360 டிகிரி பார்க்கிங் கேமரா ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மறுபுறத்தில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு எஞ்சின் தேர்வுகளுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் டிசிடி கியர்பாக்ஸ் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது ஷார்ப் என்ற வேரியண்ட்டிலும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலானது ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகிய வேரியண்ட்டுகளிலும், டீசல் மேனுவல் மாடலானது சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகிய வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். ஹெக்டர் எஸ்யூவியைவிட ரூ.1 லட்சம் கூடுதல் விலையில் இந்த ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி வேரியண்ட்டுகள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








