விற்பனையில் தொடர்ந்து சரிவை காணும் எம்ஜி ஹெக்டர்... டிசம்பர் மாத விற்பனை நிலவரம் வெளியானது...
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த 2019 டிசம்பர் மாதத்திற்கான ஹெக்டர் மாடலின் விற்பனை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி ஹெக்டர் மாடல் கடந்த டிசம்பரில் 3,021 யூனிட் கார்களின் விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான ஹெக்டர் மாடல் இதுவரை மொத்தம் 15,930 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஹெக்டர் மாடலின் இந்த டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கை அதற்கு முந்தைய நவம்பர் மாதத்தை விட 218 யூனிட்கள் குறைவு. இந்த கார் 2019ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே 3,239 மற்றும் 3,536 கார்கள் விற்பனையாகி இருந்தது.

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டாரில் இருந்து இந்தியா சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் காராக விளங்கும் ஹெக்டர் மாடலில் அதி நவீன தொழிற்நுட்பங்கள், கம்பீரமான தோற்றம் மற்றும் சக்தி வாய்ந்த என்ஜின் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏகப்பட்ட வரவேற்பை பெற்றது.

இந்த காருக்கான தேவை அதிகரித்ததாலும் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காகவும் ஹெக்டர் மாடலின் தயாரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த நவம்பர் மாதத்தில் எம்ஜி நிறுவனம் தெரிவித்திருந்தது. எம்ஜி ஹெக்டர் மாடலுக்கான காத்திருப்பு காலம் தற்சமயம் சுமார் 3 மாதங்கள் ஆகும். இந்த கால அளவு வேரியண்ட், நிறம் மற்றும் என்ஜின் தேர்வுகளை பொறுத்து மாறப்படக்கூடும்.

ஹெக்டரின் இந்த விற்பனை நிலவரம் குறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவின் இயக்குனர் ராகேஷ் சிடானா கூறுகையில், புதிய இந்திய மார்க்கெட்டில், எங்களது முதல் அறிமுக காரான ஹெக்டருக்கு வலுவான விற்பனை சூழல் ஆரம்பத்திலேயே உருவானது எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை தந்துள்ளது.

முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க இந்த 2020ஆம் வருடத்தில் ஹெக்டரின் தயாரிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக உலகளாவிய மற்றும் லோக்கல் டீலர்ஷிப்களிடம் தொடர்ந்து இணைப்பில் உள்ளோம். எங்களுக்கு வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம். எனவே தான் புதிய இந்திய மார்க்கெட்டில் ஹெக்டர் மாடலுக்கான தேவை எந்தளவில் உள்ளது என்பதை தொடர்ச்சியாக மதிப்பிட்டு வருகிறோம்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடுதலாக சர்வீஸ் சென்டர்களும் நிறுவப்பட்டு வருகின்றன என கூறினார். சர்வீஸ் சென்டர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் டீலர்ஷிப் நெட்வொர்க்கை அதிகரிக்கவும் இந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எம்ஜி நிறுவனம் தற்சமயம் 150 சென்டர்களை இந்தியாவில் நிறுவியுள்ளது.

2020ல் இந்நிறுவனத்தில் இருந்து புதியதாக 4 எஸ்யூவி கார்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், இந்த எண்ணிக்கை வருகிற மார்ச் மாதத்திற்குள் 250 அளவிற்கு அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள அந்த 4 எஸ்யூவி கார்களை பற்றி முழுமையான தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

எம்ஜி ஹெக்டர் மாடல் இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரின் ஆரம்ப விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் (டெல்லி) ரூ.12.48 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை தான், இதன் பிரிவில் உள்ள மற்ற மாடல்களான கியா செல்டோஸ், டாடா ஹெரியர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா போன்றவற்றுடன் விற்பனையில் போட்டியிட உந்துக்கோலாக உள்ளது.


Click it and Unblock the Notifications








