எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் வாங்க போறீங்களா? - உங்களுக்கு ஓர் நற்செய்தி!
எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டர் மூலமாக இந்தியாவில் பிரபலமான பிராண்டாக மாறி இருக்கிறது. ஹெக்டர் எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இரண்டாவது மாடலாக இசட்எஸ் என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஹெக்டர் போலவே, இசட்எஸ் எலெக்ட்ரிக் காரையும் எப்படியாவது வெற்றிகரமான மாடலாக நிலைநிறுத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது எம்ஜி மோட்டார்ஸ்.

இதற்காக, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக, இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாங்குவோருக்கு சார்ஜ் பிரச்னை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் சிறப்பான சார்ஜ் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

அதாவது, 5 விதமான முறையில் சார்ஜ் ஏற்றும் வசதியை வழங்குவதற்கு எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதில், முக்கியமானதாக, விரைவாக சார்ஜ் ஏற்றும் வசதியை அளிக்கும் ஃபாஸ்ட் சார்ஜர் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

முதல்கட்டமாக டெல்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களூர், நொய்டா, தானே உள்ளிட்ட நகரங்களில் இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு விரைவாக சார்ஜ் ஏற்றும் 10 ஃபாஸ்ட் சார்ஜர் மையங்களை நிறுவியுள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்திருக்கும். எனவே, எந்த நேரத்திலும் சென்று சார்ஜ் செய்து கொள்ள முடியும். இரண்டாம் கட்டமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலும் ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்கள் திறக்கப்படும்.

உரிமையாளர் வீட்டில் பொருத்தக்கூடிய சாதாரண ஏசி சார்ஜர் மற்றும் காரிலேயே வழங்கப்படும் சார்ஜர் கேபிள் ஆகியவையும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதாக அமையும்.

தவிரவும், மொபைல் வாகனம் மூலமாக எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சார்ஜ் ஏற்றும் நடமாடும் மொபைல் சார்ஜர் நிலையமும் செயல்பட உள்ளது. இதனால், இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாங்குவோர் சார்ஜ் ஏற்றும் பிரச்னை இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் முன் யோசனையுடன் செய்து வருகிறது எம்ஜி மோட்டார்ஸ்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், க்ரோம் வில்லைகளுடன் கூடிய குழிவான அமைப்புடைய க்ரில், 17 அங்குல அலாய் வீல்கள், க்ரில் அமைப்பிலேயே சார்ஜர் பாயிண்ட்டுக்கான மூடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த காரின் உட்புறம் பிரிமீயமாகவும், மிக நேர்த்தியான வடிவமைப்புடன் இருக்கிறது. 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அனலாக் டயல்கள், அதற்கு நடுவில் மின்னணு திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த காரில் ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது. பின் பகுதியில் தரை தளம் சமமாக இருப்பதால், பின் இருக்கையில் அமர்பவர்களுக்கு சவுகரியமான வசதிகள் உள்ளன.

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5KWh லித்தியம் அயான் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








