டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக இந்தியாவில் களம் காணும் எம்ஜி-ன் புதிய க்ளோஸ்ட்டர் எஸ்யூவி..!
எம்ஜி ஹெக்டர் மாடலின் பெரும் வெற்றிக்கு பிறகு, சீன ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார்ஸ் புதிய க்ளோஸ்ட்டர் எஸ்யூவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த புதிய எஸ்யூவி மாடலை பற்றிய சில முக்கியமான விபரங்கள் வெளியாகியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ள இந்த கார், முழுக்க முழுக்க மேக்ஸஸ் டி90 என்ற எம்ஜி நிறுவனத்தின் மாடலை தழுவி தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த எஸ்யூவி காரை, இந்திய மார்க்கெட்டில் பிரபலமான மாடல்களாக உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் போன்ற கார்களுக்கு கடுமையான போட்டியினை தரும் வகையில் எம்ஜி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

எம்ஜி நிறுவனத்தின் டி60 என்ற வழக்கமான ப்ளாட்ஃபாரத்தில் தயாரிப்பு பணி முழுவதையும் இந்த க்ளோஸ்ட்டர் எஸ்யூவி நிறைவு செய்துள்ளதால், மிகவும் முரட்டுத்தனமான ஏணி வடிவிலான ப்ரேம் கட்டமைப்பை பெற்றுள்ளது. பரிமாண அளவுகளை பார்த்தால், இந்த எஸ்யூவி மாடலின் நீளம் 5,005மிமீ ஆகவும், அகலம் 1,932மிமீ ஆகவும், உயரம் 1,875மிமீ ஆகவும் உள்ளது.

இதனால் இந்த புதிய எஸ்யூவி கார் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மற்றும் ஜீப் க்ராண்ட் செரோக்கி போன்று பெரிய தோற்றத்தை தான் கொண்டிருக்கும். மேலும், இந்த அளவுக்கதிகமான பரிமாண அளவுகள் தான் எம்ஜி நிறுவனமே எதிர்பார்த்திராத அளவிற்கு, இந்த க்ளோஸ்ட்டர் எஸ்யூவி மாடலுக்கு சந்தையில் வரவேற்பை பெற்றுதரும் என கூறப்படுகிறது.

காரின் வீல்பேஸ்-ன் அளவு 2,950மிமீ ஆக கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டிசைனிற்கு ஏற்ற விதத்திலான எல்இடி ஹெட்லைட்களை கொண்டுள்ள இந்த எஸ்யூவி மாடலில் 21 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் போன்றவற்றை எம்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது.

உட்புறத்தில் 12.3 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8-இன்ச்சில் ஓட்டுனருக்கான தகவல்களை அளிக்கக்கூடிய திரை, 360 டிகிரி மானிட்டர் மற்றும் இடுப்பிற்கும் சேர்த்து மொத்தம் 8 விதங்களாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு சந்தைகளில் எம்ஜி-ன் இந்த எஸ்யூவி கார் வெவ்வேறு விதமான இருக்கை வரிசைகளை பெற்றுள்ளது. இதன் இந்திய வெர்சன் மாடல் மூன்று வரிசையில் மொத்தம் 7 இருக்கைகளை பெற்று அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ-சார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை எம்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 224.5 பிஎச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க் திறனை காருக்கு வெளிப்படுத்தவல்லது.

இந்த புதிய மாடலில் வழங்கப்படவுள்ள மற்றொரு என்ஜின் தேர்வான 2.0 லிட்டர் இரட்டை-டர்போ டீசல் என்ஜின் 217.54 பிஎச்பி பவரையும் 480 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும். ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக இந்த எஸ்யூவி காரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படவுள்ளன.

சிகேடி முறையில் சீனாவில் இருந்து பாகங்களாக இந்தியாவில் அறிமுகமாகவுள்ள இந்த க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.30 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இதன் போட்டி மாடலான டொயோட்டா ஃபார்ச்சூனரின் விலையை விட சற்று அதிகம். ஃபார்ச்சூனர் மட்டுமில்லாமல், அறிமுகத்திற்கு பிறகு எம்ஜியின் இந்த எஸ்யூவி மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் இசுஸு எம்யூ-எக்ஸ் போன்ற கார்களுடனும் போட்டியிடக்கூடும்.


Click it and Unblock the Notifications








