இந்தியாவில் புதிய செடான் கார் மாடலை களமிறக்கும் எம்ஜி மோட்டார்!
இந்தியாவில் புதிய செடான் கார் மாடலை அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகச் சிறப்பான துவக்கத்தை பெற்றிருக்கிறது. அந்நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவியும், இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இதே உற்சாகத்துடன் அனைத்து ரகத்திலும் புத்தம் புதிய கார் மாடல்களை களமிறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹெக்டர் மிட்சைஸ் எஸ்யூவி மற்றும் இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை தொடர்ந்து பிரிமீயம் எஸ்யூவி மற்றும் ஹெக்டர் 7 சீட்டர் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்காக புத்தம் புதிய செடான் கார் மாடலை எம்ஜி மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் பல கார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில் செயிக் குழுமத்தின் கீழ் செயல்படும் பவ்ஜுன் கார் நிறுவனத்தின் ஆர்சி-6 என்ற செடான் கார் மாடலை ரீபேட்ஜ் செய்து எம்ஜி பிராண்டில் கொண்டு வர செயிக் குழுமம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த ரீபேட்ஜ் செய்யப்பட்ட எம்ஜி ஆர்சி-6 செடான் கார் காட்சிப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த கார் கூபே போன்ற கூரை அமைப்புடன் மிக வசீகரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. ஹெக்டர் எஸ்யூவியின் முகப்பு டிசைனை பிரதிபலிக்கும் விதத்தில், க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கும். தட்டையான பானட் அமைப்பு, அழகிய அலாய் வீல்கள், 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்றவை இந்த காரின் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த கார் 2,800 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றிருக்கும். அதாவது, இந்த காரின் உட்புறம் மிக மிக விசாலமான உணர்வையும், அதிக சவுகரியமான இடவசதியையும் அளிக்கும்.

இந்த காரில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் வழங்கப்படுவது போன்ற இரண்டு திரை அமைப்புகளுடன் டேஷ்போர்டு மிக நவீன மயமாக காட்சி தரும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என இரட்டை திரை அமைப்புடன் வருகிறது.

இந்த காரின் கேபின் மிக தரமான பாகங்கள் மற்றும் அதிக பிரிமீயமாக இருக்கும். இதனால், வாடிக்கையாளர்களை முதல் பார்வையிலேயே சுண்டி இழுத்துவிடும் என்று தெரிகிறது. மேலும், ஹெக்டர் மற்றும் இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை போன்று இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் நேரடி இணைய வசதியை பெறும் வகையில் சிம் கார்டுடன் வர இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் இந்த காரில் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட இருக்கும் இந்த புதிய எம்ஜி செடான் கார் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
Source: Autocar India


Click it and Unblock the Notifications








