80 சதவீதம் சார்ஜ் செய்ய 40 நிமிடங்களே போதும்.. பாதுகாப்பிலும் கெட்டிக்காரன்.. இதுதான் எம்ஜி தர்பார்!
எம்ஜி நிறுவனம் அதன் புத்தம் புதிய அதிநவீன தொழில்நுட்பம் அடங்கிய மின்சார காரை இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய வாகன சந்தையில் கடந்த வருடம் கால் தடம் பதித்தது. ஹெக்டர் என்ற எஸ்யூவி ரக காரின்மூலமே அதன் பயணத்தை இங்கு தொடங்கியுள்ளது. இதுவே, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் காராகும். இதையடுத்து, இந்தியாவிற்கான இரண்டாவது மாடலையும் அது அறிமுகம் செய்துள்ளது. அது, இசட்எஸ் மின்சார ரக காராகும்.

இந்த மாதத்தின் துவக்கத்தில்தான் அந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவும் ஓர் எஸ்யூவி மாடலாகும். இந்த காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே எம்ஜி ஹெக்டர் காருக்கும் அதீத வரவேற்பு நிலவி வருகின்றது. இது இந்திய ஜாம்பவான் நிறுவனமான டாடாவின் ஹாரியர் எட்டாத விற்பனை இலக்கைகூட மிக விரைவில் பெற்றது.

ஆகையால், தனது சந்தையை இந்தியாவில் விரிவாக்கம் செய்ய எண்ணிய எம்ஜி அதன் சிறப்பு வாய்ந்த மாடல்களை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், எம்ஜி இசட்எஸ் மின்சார காரை தொடர்ந்து, மார்வல் எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் இந்திய வருகையை முன்னிட்டு அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அந்த பிரத்யேக மாடலை காட்சிப்படுத்தவும் அது திட்டமிட்டிருக்கின்றது.

இதற்காக இந்த காரை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் இறக்குமதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் செயிக் நிறுவனத்தின்கீழ் எம்ஜி நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.
இதனாலயே, செயிக் நிறுவனத்தின்கீழ் விற்பனையாகும் ஒரு சில மாடல்கள் எம்ஜி நிறுவனத்தின் பேட்ஜில் இந்தியாவில் களமிறக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கொண்டுவரப்பட்டதுதான் ஹெக்டர்.

இதனடிப்படையிலேயே மூன்றாம் மாடலாக ரோவே மார்வல் எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் காரையும் அது களமிறக்க இருக்கின்றது. இந்த கார் குறித்த புகைப்படத்தை ஐசிஎன் தளம் வெளியிட்டுள்ளது. ஆனால், இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை எம்ஜி தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

இந்த கார் கான்செப்ட் மாடலாக கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் வாகன கண்காட்சியிலேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரில் 52.5 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை டிசி சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜைப் பெற்றுவிடும். அதேசமயம், ஏசி பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் முழுமையாக சார்ஜாக 8.5 மணி நேரங்கள் பிடிக்குமாம்.

இந்த தற்போது சீன வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரு வேரியண்டுகளில் விற்கப்படும் இந்த மின்சார கார் பேட்டரி திறன் வித்தியாசத்தால் வேறுபட்டு காணப்படுகின்றது. மேலும், எஞ்ஜின் திறனிலும் மாறுபட்டு காணப்படுகின்றது.
குறிப்பாக ஆரம்பநிலை மாடலாக கிடைக்கும் மின்சார கார் 186 பிஎஸ் மற்றும் 410 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனிலும், மற்றொரு வேரியண்ட் 301 பிஎஸ் மற்றும் 665 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனிலும் கிடைக்கின்றது.

சிறப்பம்சங்களில் பாதுகாப்பிலும் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்ற வகையிலான வசதிகளை இந்த மார்வல் எக்ஸ் எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கின்றது. இது செயிக் மேற்கொண்ட பாதுகாப்புகுறித்த ஆய்வில் ஐந்திற்கு 5 நட்சத்திரங்களை இது பெற்றிருக்கின்றது. ஆகையால் இந்த கார் பயணிகளின் பாதுகாப்பிற்கு அதீத அளவில் உதவும் என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக கார் மழை காலத்தில் காரின் பேட்டரிகள் பாதித்துவிடாத வண்ணம் ஐபி67 என்ற வாட்டர் ப்ரூஃப் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், உயர் மின்னழுத்த பாதுகாப்பு மற்றும் ஊடுருவல் எதிர்ப்பு பாதுகாப்பு உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி பயணிகளின் பாதுகாப்பிற்காக க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பார்க்கிங் அசிஸ்ட், அவசரகால ஆட்டோமேட்டிக் பிரேக்கிங், கொல்லிசன் அலாரம் மற்றும் ரியல் லைஃப் டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது அதிக பிரிமியம் வசதி மற்றும் பாதுகாப்பு வசதியைக் கொண்டிருப்பதால் அதிகபட்ச விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த தகவல் எம்ஜி தரப்பில் இருந்து இன்னும் வெளியாவில்லை. இருப்பினும் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








