செல்டோஸுக்கு இணையாக புதிய எஸ்யூவி... இந்தியாவில் மீண்டும் வரிந்து கட்ட மிட்சுபிஷி திட்டம்!
இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களுடன் இந்தியாவில் வர்த்தகத்தை மீட்டு எடுக்கும் புதிய முயற்சிகளில் மிட்சுபிஷி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம் எஸ்யூவி நிறுவனம் பஜேரோ எஸ்யூவி மற்றும் லான்சர் கார்கள் மூலமாக இந்தியாவில் பிரபலமானதாக இருந்து வருகிறது. எனினும், டீலர் கட்டமைப்பு மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளில் இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற தவறிவிட்டது. இதனால், அந்நிறுவனத்தின் வர்த்தகம் முற்றிலுமாக தேய்ந்து போனது.

எனினும், இந்திய கார் சந்தையில் உள்ள வர்த்தகத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் மாடல்களுடன் மீண்டும் களமிறங்குவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.

இந்த நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் எஸ்யூவிகளுக்கு இணையான ரகத்தில் ஒரு எஸ்யூவி மாடலையும், டொயோட்டா ஃபார்ச்சூனர் மார்க்கெட்டை குறிவைத்து மற்றொரு புதிய எஸ்யூவி மாடலையும் இந்தியாவில் களமிறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஃபைனான்ஸியல் எக்ஸ்பிரஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த புதிய முதலீட்டாளர் உதவியுடன் இந்திய மார்க்கெட்டில் மீண்டும் வர்த்தகத்தை துவங்குவதற்கான முயற்சிகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், புதிய முதலீட்டாளர் நிறுவனமானது வாகன உதிரிபாகத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், மிட்சுபிஷி இந்திய பிரிவுக்கான முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை அந்நிறுவனம் சப்ளை செய்து வருவதால், பெயர் வெளியிட விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஆராய்ந்து ஒப்பந்தம் செய்வதற்கு விரைவில் ஒரு கமிட்டியும் நியமிக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த ஆய்வுப் பணிகள் முடிந்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக ரூ.500 கோடி முதலீட்டுடன் இந்திய வர்த்தகத்தை துவங்குவதற்கும் மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக மிட்சுபிஷி நிறுவனம் வெளிநாடுகளில் கால் பதிக்கும் போது முதலில் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும். பின்னர்தான் ஆலை அமைப்பது குறித்து முடிவு செய்யும். அதன் அடிப்படையில் முதல்கட்டமாக இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கான திட்டமும் உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








