மிகவும் முரட்டுத்தனமான டிசைனில் குர்கா பிஎஸ்6 மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ள ஃபோர்ஸ்..
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட குர்கா எஸ்யூவி மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த புதிய பிஎஸ்6 காரை பற்றிய தகவல்களை ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

இந்நிலையில் இந்த மாடலின் கஸ்டமைஸ்ட் வெர்சன் காரும் டெல்லி அருகே நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. குர்கா எஸ்யூவியின் கஸ்டமைஸ்ட் வெர்சன் என்ற பெயருடனேயே வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ள இந்த காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.6 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 90 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் காருக்கு வழங்குகிறது. இந்த ட்ரான்ஸ்மிஷன், என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலை சக்கரம் ஒவ்வொன்றிற்கும் சமமாக பிரித்து வழங்குகிறது.

காரின் இந்த இயக்க ஆற்றல் அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்றாலும், பொதுவாக குர்கா வரிசை கார்களின் பிரியர்கள் என்ஜினின் ஆற்றலை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்களது நோக்கம் முழுவதும், கரடுமுரடான மற்றும் ஆப்-ரோடுகளில் குர்கா மாடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்வதில் இருக்கும்.

இருப்பினும் ஃபோர்ஸ் நிறுவனம் இந்த மாடலில் ஆப்-ரோடு மற்றும் அட்வென்ஜெர் பயணத்திற்கு தேவையான அனைத்து தொழிற்நுட்பங்களையும் வழங்கி குர்கா எஸ்யூவி மாடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

சமீபத்தில் அறிமுகமான 2020 குர்கா எஸ்யூவியில் இருந்து இந்த கார் கூடுதலாக பெரிய அளவிலான புல்-பார், ஹெவி-ட்யூட்டி வின்ச், சேறான நிலப்பரப்பிற்கு ஏற்ற டயர்கள், ஸ்னோர்கெல், பெரியதாக்கப்பட்ட ஃபெண்டர்கள் மற்றும் பச்சை நிறத்தில் பெயிண்ட் அமைப்பு உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

காரின் ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகளை பாதுகாக்க அவற்றின் மீது வலுவான உலோகத்தால் ஆன ராட்கள் குறுக்க நெடுக்காக பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் விட மிக முக்கியமான கஸ்டமைஸ்ட் மாற்றமாக இந்த குர்கா எஸ்யூவியில் க்ரவுண்ட் கிளியரென்ஸ் மிக அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த அளவிற்கு என்றால், தரையிலிருந்து லாரியில் உள்ளதை விட உயரத்தில் ஓட்டுனர் இருக்கையை கொண்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ள 40/13.5 ஆர்17 என்ற அளவு கொண்ட டயர்கள் ஆப்-ரோடுகளில் சஸ்பென்ஷன் அமைப்பிற்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும்.

ரூஃப்-ல் பொருட்களை வைப்பதற்கு பயன்படும் விதமாக இந்த கஸ்டமைஸ்ட் காரின் இடதுப்புறத்தில் ஏணி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய அதிகப்படியான கஸ்டமைஸ்ட் மாற்றங்களால் இந்த எஸ்யூவி கார், குர்கா பிஎஸ்6 மாடலை விட பல லட்சங்கள் அதிகமாக விலையை பெறவுள்ளது.

தன்னிடம் என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை வெளிக்காட்டும் விதமாக குர்கா எஸ்யூவி மாடலின் இந்த கஸ்டமைஸ்ட் வாகனத்தை ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் குர்கா மாடலில் இவ்வாறெல்லாம் மாற்றங்கள் கொண்டுவரலாமா என இந்த புகைப்படங்களை பார்த்தபின் இந்த எஸ்யூவி காரின் உரிமையாளர்களுக்கு புது யோசனை கூட ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications








