புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா எப்போது விற்பனைக்கு... அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது!
மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நேர் மாற்றாக எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் ஆஃப்ரோடு ரக எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு சிறந்த மாற்றாக ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி உள்ளது. விரைவில் புதிய தலைமுறை மாடலாக மஹிந்திரா தார் எஸ்யூவி வர இருக்கும் நிலையில், அதற்கு நேர் போட்டியாக இருக்கும் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியும் புதிய தலைமுறை அம்சங்களுடன் வர இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போதே, ஆட்டோ எக்ஸ்போ வந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில், இந்த புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற ஆவலுடன் ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், கொரோனா பிரச்னையால் இந்த புதிய மாடலின் வருகை தள்ளிப்போனது.

இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் புதிய தலைமுறை குர்கா எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக ஃபோர்ஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பழைய மாடலைவிட மிக மிடுக்கான தோற்றத்தில் மாறி இருக்கிறது புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி. வட்ட வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், நீர் நிலைகளை கடக்கும்போது எஞ்சினுக்கு காற்றை வழங்குவதற்கான விசேஷ ஸ்நோர்க்கெல் அமைப்பு, டெயில் கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்த புதிய மாடலில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரட்டை வண்ண இன்டீரியர் தீம் ஆகியவை கொடுக்கப்படும். இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகளும், கடைசிப் பகுதியில் இரண்டு ஜம்ப் இருக்கைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அல்லது 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். முன்புறத்தில் இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது.

ரூ.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 2ந் தேதி புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், இந்த புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வு வாய்ப்பை வழங்கும்.


Click it and Unblock the Notifications








