புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்!
புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் இடம்பெற இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக ஹோண்டா சிட்டி கார் இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஹோண்டா சிட்டி கார் வரும் 16ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் வருகையை வாடிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, இந்த கார் வசதிகளை பொறுத்து மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகிறது. அத்துடன், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், அமேஸான் அலெக்ஸா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

இந்த காரில் 4 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் தவிர்த்து, அனைத்து இருக்கைகளுக்கும் தனி ஹெட்ரெஸ்ட் அமைப்பு, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

புதிய ஹோண்டா சிட்டி காரில் 1.5 லிட்டர் வி-டெக் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த ஐ-விடெக் எஞ்சினைவிட இது சிறந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் சிறந்த எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு திறனுடன் வருகிறது.

மேலும், காரின் உட்புறத்தில் எஞ்சின் சப்தம் கேட்காதவாறு மிகச் சிறப்பான சப்த தடுப்பு அமைப்புடன் வர இருக்கிறது. கையாளுமையிலும் சிறந்த மாடலாக இருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி கார் வடிமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக மாற்றம் கண்டுள்ளது. ஹோண்டா அக்கார்டு டிசைன் அம்சங்களை பார்க்க முடிகிறது. தற்போதைய மாடலைவிட பரிமாணத்தில் பெரிய கார் மாடலாக இருப்பதால், உட்புறத்தில் மேம்பட்ட இடவசதியை உணர முடியும்.

புதிய ஹோண்டா சிட்டி கார் மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆகிய மிட்சைஸ் செடான் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். மேலும், போட்டியாளர்களைவிட அதிக சிறப்பம்சங்களுடன் கூடுதல் மதிப்பை வழங்கும் வகையில் நிலைநிறுத்தப்படும்.
Source: Team BHP


Click it and Unblock the Notifications








