புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு குவிகிறது!
விலை அறிவிப்பதற்கு முன்னதாகவே புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டின் சூப்பர் ஹிட் மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா இருந்து வருகிறது. இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் மாறுபட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார் வரும் 17ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இந்த புதிய மாடலுக்கு கடந்த 2ந் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த நிலையில், முன்பதிவு துவங்கப்பட்டு ஒரு வாரத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் ஏராளமான சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. புதிய எஞ்சின் தேர்வுகளிலும் வர இருக்கிறது. புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் இ, இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

கியா செல்டோஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இந்த எஞ்சின்கள் அனைத்துமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 எச்பி பவரையும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்மசாக 140 எ:்பி பவரையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 115 எச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். அனைத்து எஞ்சின்களுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

உட்புறத்தில் பீஜ் மற்றும் கருப்பு வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7.0 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரில் 50 விதமான வசதிகளை அளிக்கும் புளூலிங்க் எனப்படும் கனெக்டெட் கார் செயலியும் வழங்கப்படும்.

பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் வியூ மானிட்டர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு பங்காளியான கியா செல்டோஸ் கார் கடும் போட்டியாக இருக்கும். எனினும், தற்போது கிடைத்து வரும் முன்பதிவு எண்ணிக்கையானது நிச்சயம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு நம்பிக்கையை தரும் விஷயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








