புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!
புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியிடப்பட்டு இருக்கிறது. படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எக்ஸிகியூட்டிவ் செடான் கார் ரகத்தில் ஹூண்டாய் எலான்ட்ரா கார் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. பல நாடுகளில் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையையும் பெற்று வருகிறது. எனவே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது இந்த கார் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது ஹூண்டாய் எலான்ட்ரா கார் ஏழாவது தலைமுறை மாடலாக மாற்றம் கண்டுள்ளது. வரும் 18ந் தேதி அமெரிக்காவில் வைத்து இந்த கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வடிவமைப்பு, வசதிகளில் பல படிகள் முன்னேறி இருக்கும் இந்த புதிய மாடல் முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் முற்றிலும் புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நீள, அகலம் அதிகரிக்கப்பட்டு உயரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டிசைன் கொள்கையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், தற்போதைய மாடலைவிட மிகவும் வசீகரமாகவும், மிரட்டலான தோரணையையும் பெற்றிருக்கிறது.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் கூபே ரகத்திலான கார் மாடல் போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், தற்போதைய மாடலின் டிசைனிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக வருகிறது.

க்ரோம் பாகங்களுடன் கூடிய பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், டியூவல் டோன் அலாய் வீல்கள் மற்றும் பின்புறத்தை அலங்கரிக்கும் எல்இடி விளக்கு பட்டை ஆகியவை முக்கிய அம்சங்களாக தெரிகின்றன.

உட்புறத்தை பார்க்கும் வாய்ப்பும் இப்போது வெளியிடப்பட்டுள்ள படங்களின் மூலமாக கிடைத்துள்ளது. தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், விமானத்தில் இருப்பது போன்ற கியர் லிவர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரில் இடம்பெற இருக்கும் எஞ்சின் தேர்வுகள் குறித்த தகவல் இல்லை. ஆனால், இந்த காரில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் 2.0 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் தேர்வில் தக்க வைக்கப்படும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும். இந்த காரில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

ஹூண்டாய் எலான்ட்ரா காரின் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடல் கடந்த ஆண்டு இறுதியில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட் கார் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வரப்படும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications