மஹிந்திரா தார் ஆட்டோமேட்டிக்... கேட்கும்போதே சந்தோஷம் பீறிடுதே!
புதிய தலைமுறை மாடலாக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் தார் ஆஃப்ரோடு எஸ்யூவி புதிய அத்யாயத்தை எழுதும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டின் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் உள்ளது. எளிமையான வடிவமைப்பு, ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற தொழில்நுட்ப அம்சங்கள், பட்ஜெட் விலையில் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் மஹிந்திரா தார் எஸ்யூவி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்பம் என அனைத்திலும் புதிய தலைமுறை மாடலாக மஹிந்திரா தார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜூன் அல்லது ஜூலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது. அதாவது, பண்டிகை காலத்தை மனதில் வைத்து இந்த புதிய மாடலை மஹிந்திரா கொண்டு வர இருக்கிறது.

இந்த சூழலில், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி குறித்து பல முக்கியத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சென்ற நிதி ஆண்டின் நிதி நிலை அறிவிப்பு கூட்டத்தில் பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி ராஜேஷ் ஜெஜுரிகா,"ஏராளமான அம்சங்கள், தேர்வு, ஆட்டோமேட்டிக் உள்ளிட்ட அனைத்து விதத்திலும் புதிய மஹிந்திரா தார் பெரிய அளவிலான தேர்வுகளுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இது நிச்சயம் புதிய ரகத்தை உருவாக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா தார் எஸ்யூவி இதுவரை டீசல் எஞ்சின்கள் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் மட்டுமே கிடைத்து வந்தது. இந்த நிலையில், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் மிக முக்கிய விஷயமாக இருக்கும்.

மேலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறுவது ஊரறிந்த ரகசியமாக இருந்த நிலையில், தற்போது அதுவும் மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து உறுதியாகி இருக்கிறது. புதிய தார் எஸ்யூவியில் அசின் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 1.5 லிட்டர் எம்-ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎஸ் பவரை வழங்கும் திறனை பெற்றிருக்கும். அடுத்து 2.0 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் நிரந்தரமாக இடம்பெறும்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முன்னோக்கி அமைக்கப்பட்ட பின்புற இருக்கை ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

வரும் அக்டோபர் முதல் வாரத்தில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. செப்டம்பரில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்படும் வாய்ப்புள்ளது. தற்போதைய மாடலைவிட விலை கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. ஆட்டோகார் இந்தியா செய்தியை மூலமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








