இந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி!
சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ள புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி இந்தியாவின் விற்பனை பட்டியலில் இணைந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான சொகுசு ரக எஸ்யூவி மாடலாக ஜிஎல்ஏ விற்பனையில் உள்ளது. இந்தியாவிலும் ஜிஎல்ஏ எஸ்யூவிக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பிப்ரவரியில் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜிஎல்ஏ எஸ்யூவி இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய தலைமுறை மாடலில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால், இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி முதல் முன்பதிவு துவங்கிய நிலையில், தற்போது இந்த புதிய சொகுசு எஸ்யூவி மாடல் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா இணையதள பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியானது எம்எஃப்ஏ என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பழைய ஜிஎல்ஏ எஸ்யூவியிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில், வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், வைரக்கற்கள் பதிக்கப்பட்டது போன்ற அமைப்புடை கவர்ச்சிகரமான புதிய க்ரில் அமைப்பு, கூடுதல் வீல் பேஸ் நீளம், இரட்டை குழல் சைலென்சர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக தெரிகின்றன.

இந்த எஸ்யூவியின் உட்புறத்தில் மிகவும் முக்கிய அம்சமாக, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுதிரை அமைப்புக்கு சேர்ந்தாற்போல் காட்சியளிக்கும் திரை அமைப்பு டேஷ்போர்டில் பிரதானமாக தெரிகிறது. இதன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் விஷயமாக இருக்கும்.

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் வழங்கப்படும் MBUX செயலி மூலமாக வாய்ஸ் கமாண்ட் அல்லது டச்பேடுகள் மூலமாக கட்டுப்படுத்துவதற்கான வசதியை வழங்கும். டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், இருக்கைகளுக்கு மெமரி வசதி, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல் என ஏராளமான அம்சங்களை இந்த எஸ்யூவி பெற்றுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். வெளிநாடுகளில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் தேர்வு இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி ரூ.43 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பிஎம்டபிள்யூவி எக்ஸ்1, ஆடி க்யூ3, வால்வோ எக்ஸ்சி40 உள்ளிட்ட ஆரம்பர ரக சொகுசு எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது.


Click it and Unblock the Notifications








