புதிய தலைமுறை போர்ஷே 911 டர்போ எஸ் மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்!
புதிய தலைமுறை போர்ஷே 911 டர்போ எஸ் மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. விலை உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர் கார் மார்க்கெட்டில் மிகவும் தனித்துவமும், மதிப்பும் மிக்க மாடலாக போர்ஷே 911 கார் வாடிக்கையாளர்கள் தேர்வில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அதிக சிறப்பம்சங்களுடன் புதிய தலைமுறை போர்ஷே 911 டர்போ எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

புதிய போர்ஷே 911 டர்போ எஸ் மாடல் 992 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. முந்தைய மாடலைவிட புதிய மாடலானது அகலத்தில் கூடி இருக்கிறது. மேலும், சக்கரங்களுக்கு இடையிலான இடைவெளியும் அதிகரித்துள்ளது.

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், முன்புற பம்பரில் எல்இடி விளக்கொளி பட்டை ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மேலும், ஆக்டிவ் ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 20 அங்குல வீல்கள் கொடுக்கப்படுவதுடன், ஆப்ஷனலாக 21 அங்குல அலாய் வீல்களை வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது. மேலும், 10 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய செராமிக் காம்போசிட் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த காரில் ஜிடி மாடலைப் போன்றே மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், 10.9 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ், 18 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய போர்ஷே 911 டர்போ எஸ் கார் மாடலில் ப்ளாட் 6 சிலிண்டர்கள் அமைப்புடைய 3.8 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 641 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது.

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளிலும், 0 - 200 கிமீ வேகத்தை 8.9 வினாடிகளிலும் எட்டிவிடும் வல்லமை கொண்டது. மணிக்கு 330 கிமீ வேகம் வரை தொடக்கூடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய போர்ஷே 911 டர்போ எஸ் (992) மாடலுக்கு ரூ.3.08 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டாலும், இந்த ஆண்டு இறுதியில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








