பீஜிங் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வந்த மிரட்டலான ஹோண்டா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்!
ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் மாடல் பீஜிங் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் மாடலின் படங்கள், விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம் அண்மையில் சிறிய வகை எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் மாடலையும் பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

ஹோண்டா எஸ்யூவி இ கான்செப்ட் என்ற பெயரில் இந்த மாடல் குறிப்பிடப்படுகிறது. இது கான்செப்ட் மாடலாக தெரிவிக்கப்பட்டாலும், தயாரிப்பு நிலையை நெருங்கிய பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

க்ராஸ்ஓவர் எஸ்யூவி போன்ற தோற்றததை இந்த ஹோண்டா எஸ்யூவி இ கான்செப்ட் பெற்றிருக்கிறது. ஹோண்டா நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இது பொது பார்வைக்கு வந்துள்ளது.

இதன் தயாரிப்பு நிலை மாடலானது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதலில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, உலகின் பிற நாடுகளிலும் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போது இரண்டு கதவுகள் கொண்ட மாடலாக இருந்தாலும், தயாரிப்பு நிலை மாடலானது 4 கதவுகள் கொண்டதாக இருக்கும்.

முகப்பில் மெல்லிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், நடுவில் பெரிய அளவிலான ஹோண்டா லோகோ மற்றும் பெரிய பம்பர் அமைப்பு, வலிமையான அரை வட்ட வடிவிலான வீல் ஆர்ச்சுகள், மல்டி ஸ்போக் அலாய் வீல்கள், பின்னோக்கி தாழ்ந்து முடியும் கூரை அமைப்பு, மெல்லிய டெயில் லைட்டுகளுடன் மிரட்டலான க்ராஸ்ஓவர் வடிவமைப்பை பெற்றிருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்க இருப்பதாக ஹோண்டா ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே, இந்த மாடலானது ஜெனரல் மோட்டார்ஸ் கூட்டணியில் உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அடுத்த ஆண்டு சீனாவில் இந்த புதிய மாடல் உற்பத்திக்கு கொண்டு செல்லப்படும் வாய்ப்புகள் உள்ளன. அப்போது இந்த காரில் இடம்பெற்றிருக்கும் பேட்டரி, மின்மோட்டார், ரேஞ்ச் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








