பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரை நடிகர் ஷாரூக்கான் அறிமுகம் செய்தார்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று ஆட்டோ எக்ஸ்போவில் நடந்த நிகழ்ச்சியில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை இந்தி நடிகர் ஷாரூக்கான் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பொது பார்வைக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இந்த காரில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இரண்டாம் தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கடந்த ஆண்டு பிற்பாதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் பொது பார்வைக்கு வந்துள்ளது.

பழைய மாடலிலிருந்து அதிக வேறுபாடுகளுடன் புதிய தலைமுறை மாடல் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முகப்பு க்ரில் அமைப்பு பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. தனித்துவமான ஸ்பிளிட் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், பூமராங் வடிவ எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பனி விளக்குகள் அறை ஆகியவை காருக்கு வசீகரத்தை அளிக்கிறது.

பக்காட்டில் விசேஷமான அலுமினிய கிளாடிங் பொருத்தப்பட்ட சி பில்லர், எல்இடி விளக்குகளுடன் டெயில் லைட் க்ளஸ்ட்டர், புதிய வடிவமைப்புடன் பின்புற கதவு அமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்டுகள், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் க்ரெ்டடா எஸ்யூவியின் உட்புறமும் முற்றிலும் மாறுபட்டுள்ளது. புதிய டேஷ்போர்டு அமைப்பு, சென்டர் கன்சோல், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, பனோரமிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் சிறிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதிகள் உள்ளன. ஹூண்டாய் வெனியூ காரில் இருப்பது போன்று, இந்த காரிலும் புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி செயலி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோனை இணைத்து பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளை பெற முடியும்.

கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே பிஎஸ்-6 தர எஞ்சின் தேர்வுகள் இந்த காரிலும் பயன்படுத்தப்படும். புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும் பெட்ரோல் எஞ்சின், 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை இடம்பெறும்.

இந்த காரில் 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து எஞ்சின்களுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

அடுத்த மாதம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் விற்பனைக்கு வருகிறது. விலை அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும். இந்த கார் கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








