திறன் வாய்ந்த ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்!
மாருதி பலேனோ காரைவிட அதிக திறன் வாய்ந்த ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விற்பனைக்கு வர இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் வருகை குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற கார் மாடல் என்பதால், புதிய தலைமுறை எலைட் ஐ20 காரின் வருகை பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளதில் ஆச்சரியமில்லை.

இந்த கார் குறித்த முக்கியத் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, புதிய எலைட் ஐ20 காரில் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொடுக்கப்பட இருக்கிறது. இதன் நேரடி போட்டியாளராக இருக்கும் மாருதி பலேனோ காரில் 12V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்படும் நிலையில், புதிய எலைட் ஐ20 காரில் அதிக திறன் வாய்ந்த 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் பயன்படுத்தப்பட இருக்கிறது.

இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தில் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் இடம்பெற்றிருக்கும். தேவைப்படும்போது எஞ்சினுடன் சேர்ந்து கூடுதல் டார்க்கை வழங்கும். இதன்மூலமாக, கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான மாசு உமிழ்வையும் உறுதி செய்யும்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரான இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வரலாம்.

இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 100 பிஎஸ் பவரையும், 120 பிஎஸ் பவரையும் வழங்கும் இரண்டு ட்யூனிங்கில் இப்போது கிடைக்கிறது. இந்த எஞ்சினுடன் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படும். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தின் மூலமாக காரின் எரிபொருள் சிக்கனம் 3 முதல் 4 சதவீதம் வரை மேம்படும்.

தற்போது ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் இந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 120 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இல்லாமல் கிடைக்கிறது. ஹூண்டாய் ஆரா காரில் 100 பிஎஸ் பவரை அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இந்த எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது.

இந்த பெட்ரோல் எஞ்சினின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் 18.15 கிமீ மைலேஜையும், டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் 18.27 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஹூண்டாய் ஆராவில் வழங்கப்படும் இதே 100 பிஎஸ் எஞ்சின் தேர்வு 20.5 கிமீ மைலேஜை வழங்குகிறது.

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தின் மூலமாக காரின் எரிபொருள் சிக்கனம் இந்த அளவைவிட கூடுதலாக இருக்கும். மேலும், ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பமும் இந்த மாடலில் இடம்பெறும் என்பதால், புதிய பிஎஸ்6 விதிகளுக்கு ஒப்பானதாக இருக்கும்.

இந்த ஆண்டு மத்தியில் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5.70 லட்சம் ஆரம்ப விலையில் புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோ காருக்கு இது நேரடி போட்டியாக இருப்பதுடன், டாடா அல்ட்ராஸ், டொயோட்டா க்ளான்ஸா, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கும் போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








